புதுக்கோட்டையில் வரலாற்றுச் சாதனை!..அரசுப் பேருந்து ஓட்டுநராக தடம் பதிக்கும் திருநங்கை ஸ்ரீ தேவி!!...
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்து, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (TNSTC) முதல்முறையாக திருநங்கை ஒருவர் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வருவது பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது.
திருநங்கை ஸ்ரீதேவி, கனரக வாகன ஓட்டுநர் என்ற பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த துறையில் தனது திறமையாலும் தன்னம்பிக்கையாலும் புதிய வரலாறு படைத்து வருகிறார். தினமும் நூற்றுக்கணக்கான பயணிகளை பாதுகாப்பாக ஏற்றிச் சென்று தனது பணியை அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் மேற்கொண்டு வருகிறார்.
அரசுப் போக்குவரத்துத் துறையில் திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவது, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இது திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தையும், அவர்களின் திறமைகளுக்கான மரியாதையையும் உயர்த்தியுள்ளது.
ஸ்ரீதேவியின் இந்த சாதனைக்கு சக ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஆறு மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் திருநங்கை கலையரசி நடத்துனராகப் பணியில் சேர்ந்த நிலையில், தற்போது திருநங்கை ஸ்ரீதேவி ஓட்டுநராகப் பணியாற்றுவது சமூக முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க அடையாளமாக அமைந்துள்ளது.
திறமைக்கும் தன்னம்பிக்கைக்கும் பாலினம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்து, பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார் திருநங்கை ஸ்ரீதேவி.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக