நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லாப் புதிய புத்தகப் பைகள் குப்பைத் தொட்டியிலும், கால்வாயிலும் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, மாணவர்களுக்கு அரசின் விதிகளின்படி விலையில்லாப் பாடப்புத்தகங்கள் மற்றும் புதிய புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.
பள்ளி முடிந்து மாலை நேரத்தில் மாணவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பும்போது, தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய புத்தகப் பைகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பைகளைச் சாலை ஓரங்களில் இருந்த குப்பைத் தொட்டியிலும், அருகில் இருந்த கால்வாயிலும் வீசிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பொருட்கள் இவ்வாறு வீணடிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பைகளை எதற்காக வீசிச் சென்றார்கள்? பைகளின் தரம் குறைவாக இருந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக