குற்றாலம்.ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரப் போராட்டம்! நியாயமான கோரிக்கை புறக்கணிக்கப்படுவது ஏன்?

தென்காசி மாவட்டம்,ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும்  சுற்றுலாத் தலமான குற்றாலத்தில், சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காகப் பல்வேறு போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை மேற்கொள்கிறது. குறிப்பாக, ஐந்தருவி செல்லும் பாதையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஒருவழிப்பாதை விதி, பொதுப் போக்குவரத்திற்குச் சாதகமாகவும், அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

அரசுப் பேருந்துக்கு ஒரு நீதி, ஆட்டோவுக்கு வேறொரு நீதியா?

ஐந்தருவி செல்லும் பாதையில் அரசுப் பேருந்துகள் தடையின்றி இயங்க அனுமதிக்கப்படுகின்றன. பயணிகளின் எண்ணிக்கை மற்றும் பொதுப் போக்குவரத்து என்ற அடிப்படையில் இதற்கு அனுமதி வழங்கப்படுவதை ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பொதுமக்களுக்குச் சேவை செய்யும் ஆட்டோக்களுக்கு மட்டும் அதே பாதையில் நுழைய அனுமதி மறுக்கப்படுவது ஏன் என்பதுதான் ஆட்டோ ஓட்டுநர்களின் பெரிய கேள்வி.

எரிபொருள் இழப்பு மற்றும் நேர விரயம் ஒரு வழிப்பாதை காரணமாக, ஆட்டோக்கள் அதிக தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதனால், நாள் ஒன்றுக்கு ஆட்டோ ஓட்டுநர்களின் எரிபொருள் செலவு கணிசமாக உயர்கிறது. ஏற்கனவே வருமானம் குறைவால் சிரமப்படும் ஓட்டுநர்களுக்கு, இந்த கூடுதல் தூரம் மற்றும் நேர விரயம் பெரும் பொருளாதாரச் சுமையைத் தருகிறது. தாங்களும் பொதுமக்களுக்குச் சேவை செய்யும் தொழிலாளர்கள்தான் என்பதையும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடவில்லை என்பதையும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

அதிகாரிகளின் அணுகுமுறை என்ன?

உள்ளூர் காவல் ஆய்வாளரிடம் இது தொடர்பாகக் கோரிக்கை விடுத்தும், 'பாதுகாப்பு மற்றும் நெரிசல்' என்ற காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. ஆனால், நெரிசலைக் கட்டுப்படுத்த ஆட்டோக்களை முழுமையாகத் தடுப்பது தீர்வாகாது என்பது ஓட்டுநர்களின் கருத்து. மாறாக, சங்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி அளிப்பது அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்வது என நிபந்தனைகளுடன் கூடிய தீர்வுகளை வழங்கலாம்.

கோரிக்கை என்ன?

பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாமல், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். "அனைவருக்கும் சமமான வாய்ப்பு மற்றும் நியாயமான போக்குவரத்து மேலாண்மை" என்பதே ஆட்டோ ஓட்டுநர்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பயணத் தேவைக்கு உயிர்நாடியாக இருக்கும் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டியது அவசியமாகும். தமிழக அரசும் தென்காசி மாவட்ட நிர்வாகம் வருடத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே இந்தத் தொழிலை  நம்பி உள்ள எங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத் தருமா? ஆட்டோ ஓட்டுநர்களின் நியாயமான கோரிக்கைகளை  நிறைவேற்றித் தருமா தென்காசி மாவட்ட நிர்வாகம்?

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!