நகைக்காக மகளை மாப்பிள்ளை குடும்பத்தினர் திட்டமிட்டு கொலை செய்ததாக பெற்றோர் புகார் – ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு!!

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் – விஜயா தம்பதியினரின் இரண்டாவது மகள் பொற்கொடி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த குணா என்பவருக்கும் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி இரு குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், பொற்கொடி திடீரென உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இராணிப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், திருமணமான நாளிலிருந்து குணா மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் நகை மற்றும் வரதட்சணை கேட்டு பொற்கொடியை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். பலமுறை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தலையிட்டு சமரசம் செய்து மகளை கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது பொற்கொடி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதால், இது இயல்பான மரணம் அல்ல என்றும், தனது மகள் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக குணா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இராணிப்பேட்டை காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்தபடி, தங்களது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொற்கொடியின் பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!