கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக் குழுமங்களின் சார்பில் நடைபெற்ற சாதனையாளர்களுக்கான லெகஷி விருது வழங்கும் விழா!!
கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் பல்துறைச் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் லெகஷி விருது வழங்கும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கேபிஆர் கல்விக்குழுமங்கள் ஆண்டுதோறும் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறந்த ஆய்வறிஞர், இளம் நட்சத்திரச் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர், சிறந்த பேராசிரியர் மற்றும் சிறந்த முன்னாள் மாணவர் போன்ற பிரிவுகளின்கீழ் விருதினையும் பரிசுத்தொகையினையும் வழங்கி வருகிறது.
இவ்வாண்டு நடைபெற்ற லெகஷி விருதிற்கு 14 மாநிலங்களிலிருந்து 1200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவ்விண்ணப்பங்களை, நடுவர் குழுவினர் முறைப்படுத்தி, விருதிற்கான விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வுசெய்தனர். அதில் அமெட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வி.ராஜேந்திரன் வாழ்நாள் சாதனையாளர் விருதுடன், 50,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த பேராசிரியர் விருதிற்கான பிரிவில், பாலக்காட்டில் உள்ள இந்தியன் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர். சாந்தக்குமார் மோகன் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர். ஜெயகிருஷ்ண கந்தசாமி முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
சிறந்த ஆய்வறிஞர் பிரிவில் பாரதியார் பல்கலைக்கழக வணிகவியல் புலமுதன்மையர் டாக்டர். எம்.சுமதி, காருண்யா அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் துறைப் பேராசிரியர் டாக்டர். ஆர்.நந்தகுமார், தன்பாத் இந்தியன் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர். பார்த பிரத்திம் ராய், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர். கார்த்திகேயன் முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இளம் நட்சத்திரச் சாதனையாளர் பிரிவில் கலசலிங்கம் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் இணைப்பேராசிரியர் டாக்டர். ஆர்.ராஜசுப்பிரமணியன், எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் டாக்டர். எஸ்.சாம் டேவிட் முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான பிரிவில் கேபிஆர் கல்விக்குழுமத்தைச் சார்ந்த, தனவிக்னேஷ், ரத்னசபரீஷ், பிரேம்குமார், பிரியவர்ஷனா முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இவ்விருது வழங்கும் விழாவிற்குக் கேபிஆர் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர். கே.பி.இராமசாமி, குமரகுரு நிறுவனங்களின் தலைவர் டாக்டர். பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் ஆகியோர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக