தமிழக பள்ளிகள் வரலாற்றில் முதன்முறையாக இயற்கை ஆய்வகம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டது!!
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் இயற்கை ஆய்வகம் துவங்கப்பட்டது. தமிழக பள்ளிகள் வரலாற்றில் முதன் முறையாக இயற்கை ஆய்வகம் மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் இயற்கை ஆய்வகம் துவங்கி ஆண்டு முழுமைக்குமான செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களுக்கான இயற்கை பாடத்திட்டம் குறித்தும் விளக்கவுரை நிகழ்த்தினார். மழலைப்பருவத்தில் தொடங்கி மாணவர்களுக்கு இயற்கையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட, நல்ல மண்ணை தேர்ந்தெடுத்தல் , விதைத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், செடியாக, மரமாக வளரும் வரை பாராமரித்தல் போன்ற செயல்களை பாடத்திட்டமாக உருவாக்கி செய்முறைக் கல்வியாக அறிமுகப்படுத்துதலே இயற்கை ஆய்வகத்தின் முக்கிய நோக்கமாகும்.
பாடப்புத்தகங்களில் மனப்பாடம் செய்த இயற்கை விவசாயத்தை, இயற்கை பராமரிப்பை விதைப்பது முதல் வளர்ப்பது வரை செய்முறைப் பாடமாக மாணவர்கள் அறிந்துகொள்வார்கள். அதன்படி மாணவர்களுக்கு தனித்தனியே ஆளுக்கொரு மண்தொட்டியும் விதையும் வழங்கி அதை அவர்கள் விதைத்து வளரும் வரை பராமரிக்க வேண்டும். இவற்றை இயற்கை தூதுவர்கள் என்கின்ற மாணவர்கள் குழு ஆய்வு செய்து ஆண்டின் இறுதியில் எந்த மாணவர் செடியை மரத்தை சிறப்பாய் செழிப்பாய் வளர்த்திருக்கின்றாரோ அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள். பள்ளியின் இயற்கை ஆய்வகத்தை ”விதைக்கலாம்”அமைப்பின் நிறுவனர் மலையப்பன் அவர்களும் விதைக்கலாம் நண்பர்களும் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்து இந்த இளம் இயற்கை விஞ்ஞானிகளுக்கு தங்கள் விதைக்கலாம் அமைப்பு தேவையான அறிவுரைகளை தொடர்ந்து வழங்கும் என்றும் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இயற்கை பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்தவும் பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஈக்கோ கிளப் தலைராக ஒன்பதாம் வகுப்பு அகல்யாவும் செயலாளராக எட்டாம் வகுப்பு தேவதர்ஷனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர். இயற்கை ஆய்வக வழிகாட்டியாக ஆசிரியர் அபிநயா செயல்படுவார். பள்ளியில் முதன்முறையாக துவங்கப்பட்டு்ளள இயற்கை ஆய்வகத்தை பெற்றோர்கள் பெரிதும் பாராட்டுகின்றனர். முன்னதாக தலைவர் அகல்யா வரவேற்க, நிறைவாக செயலாளர் தேவதர்சன் நன்றி கூறினார். நிகழ்வை ஒன்பதாம் வகுப்பு கன்யா தொகுத்து வழங்கினார்.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்.





கருத்துகள்
கருத்துரையிடுக