கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு த. வெ.க. கர்னல் பி. சுரேஷ் நேரில் பாராட்டு!!
தேனி மாவட்டம், காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரம், நாட்டின் பாதுகாப்பிற்காக ஆற்றிய வீரதீரச் செயலுக்காக இந்திய ராணுவத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான கீர்த்தி சக்ரா விருது பெற்றுள்ளார். அவரது இந்த சாதனைக்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரியும் சமூக சேவகருமான கர்னல் பி. சுரேஷ், கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்தார்.
அப்போது அவர், ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு சால்வை அணிவித்து கௌரவித்ததுடன், நினைவுப் பரிசு மற்றும் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, ராணுவ வீரரின் குடும்பத்தினருடன் கலந்துரையாடிய அவர், நாட்டின் பாதுகாப்பிற்காக மீனாட்சி சுந்தரம் மேற்கொண்ட துணிச்சலான பணிகள் குறித்தும், அவருடைய சேவை அனுபவங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கர்னல் பி. சுரேஷ் கூறுகையில், “நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் ஒவ்வொருவரும் சமூகத்தால் போற்றப்பட வேண்டியவர்கள்.
அவர்களின் தியாகமும் அர்ப்பணிப்பும் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் ராணுவ வீரர்களுக்குத் தேவையான அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காத சூழ்நிலைகள் இருந்தன. ஆனால் தற்போது ராணுவ வீரர்களின் சேவையை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.
மேலும், “கீர்த்தி சக்ரா விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்தை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேரில் அழைத்து பாராட்டியது, அவருக்கு மட்டுமல்லாமல் நாட்டைப் பாதுகாக்கும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்
இது ராணுவ வீரர்களின் மன உறுதியை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்றும் தெரிவித்தார்.
அத்துடன், “ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
அவர்களுக்கான தேவைகள் மற்றும் நலன்களை முன்னிறுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபடும்” என்றும் அவர் கூறினார்.
மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வரும் கர்னல் பி. சுரேஷுடன், ஏராளமான முன்னாள் ராணுவ வீரர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கீர்த்தி சக்ரா விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்திற்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
ராணுவ வீரரின் இந்த வீரதீரச் செயலும், அதற்காக வழங்கப்பட்ட கீர்த்தி சக்ரா விருதும், தமிழக முதல்வர் வழங்கிய ரூபாய் 48 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கி குடும்பத்தினரை அழைத்து பாராட்டியது இளைஞர்கள் மத்தியில் தேசப்பற்றையும் நாட்டுப்பற்றையும் வளர்க்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக