ஜம்புதீப பிரகடனம்! 1801 ஜூன்16 -- 225-ஆம் ஆண்டு!!

 

ஜம்புதீப பிரகடனம்! 1801 ஜூன்16 -- 225-ஆம் ஆண்டு:

1600-களில் தங்கள் வியாபார தளங்களை நிறுவதற்காக கடல் வழியாக வந்த  ஆங்கிலேயர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் வியாபாரம் செய்தனர்.  காலப்போக்கில்  இந்த அகண்ட இந்திய நிலத்தை  ஆளும் எண்ணம்  கொண்டனர். அதற்காக நயவஞ்சகமாக குறுக்கு வழியில்  நமது மன்னர்களிடம் வரிவசூல் செய்ய உரிமை  பெற்றார்கள் . மேலும் நம்மை பிரிக்க நமக்குள்ளேய  ஆசை மற்றும் ஏற்றதாழ்வு எண்ணங்களை  உருவாக்கினர். நம் நாட்டை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் கொண்டு வர மும்முரமாக இருந்தனர். அதற்காக நாம் அவர்களுக்கு வரி கட்ட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினர். இதனால்    கம்பெனியை எதிர்த்து நெற்கட்டான்செவ்வலில்   போர் வெடித்தது.  அதை தொடர்ந்து தமிழகத்தின் பல பாளையக்காரர்கள், சிற்றரசர்கள், வீரத் தலைவர்கள்ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி வந்தனர்.

பல பாளையங்களில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக  போர் மூண்டது.  முக்கியமாக பாஞ்சாலங்குறிச்சி, சிவகங்கை, போன்ற பகுதியின் மன்னர்கள் ஆங்கிலேயர்களை எப்படி கலங்க செய்தனர் என்பது சுவாரசியமான மற்றும் மறைக்கப்பட்ட வரலாறு. 

 சிவகங்கை சீமை:

தஞ்சை மன்னர் துக்கோஜி உதவியுடன் சேது நாட்டை மீட்டு  ஐந்து பகுதியாக்கி அதில் இரண்டு பகுதி சசிவர்ன தேவரிடம் கொடுக்கப்பட்டது அப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து அழகிய சிவகங்கை நகரத்தை  உருவாக்கி 1730 மன்னர் ஆனார்  சசிவர்னதேவர்.  அவர் மகன் முத்துவடுகநாதருக்கு 1746 செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி மகளான வேலூநாச்சியாருக்கும் திருமண செய்துவைத்தார் சசிவர்னதேவர். 1750-ல் சசிவர்னதேவர் மறைவுக்குப் பின் இரண்டாவது மன்னராக முத்துவடுநாதர் ஆட்சி செய்தார் ஆற்காடு நவாப் வரி வசூலை ஆங்கிலேயருடன் பங்கிட்டுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப் படை 1772ல் ராமநாதபுரத்தை கைப்பற்றியதும் சிவகங்கையின் மீது போர் தொடுத்தது. இந்த திடீர் தாக்குதலில் முத்து வடுகநாதர் இறந்தார். அதற்குபின் வேலுநாச்சியாரும் மருது சகோதரர்களும் விருப்பாச்சி கோபால் நாயக்கர், ஹைதர் அலி, திப்புசுல்‌‌‌தான் ஆகியோர் உதவியுடன் எட்டு வருடம் கிழித்து 1780-ல் சிவகங்கை சீமையை மீட்டனர். சிவகங்கை சீமையை மீட்டு வேலு நாச்சியாரை அரியணையில் அமர்த்தினர் மருது சகோதரர்கள். வேலுநாச்சியார் மறைவுக்கு பின் மருது சகோதரர்கள் சிவகங்கையின் அரச பொறுப்பேற்றனர். சிவகங்கை தமிழ்நாட்டின் முக்கியமான அரசாட்சிகளில் ஒன்றாகும்.

மருது சகோதரர்கள் யார் ?

1748 ஆம் ஆண்டு முக்குளம் கிராமத்தில் உடையார்த் தேவர் (மொக்க பழநியப்பன்) மற்றும் ஆனந்தாயி (பொன்னாத்தாள்) தம்பதியருக்கு பெரியமருது பாண்டியர் பிறந்தார்; 1753 ஆம் ஆண்டு சின்னமருது பாண்டியர் பிறந்தார். பெரியமருது வெள்ளை நிறத்தால் “வெள்ளை மருது” என்றும், இளையவர் என்பதால் “சின்னமருது” என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களின் தந்தை மொக்க பழநியப்பன் சேதுபதி நாட்டின் தளபதியாக இருந்தார். சிறுவயதிலேயே மருது சகோதரர்கள் வீரமும் தைரியமும் கொண்டவர்களாக வளர்ந்தனர். ஒருமுறை கோட்டைக் கதவுகளை அடைத்திருந்த பெரிய பீரங்கியை நகர்த்தி கதவைத் திறந்த சம்பவம் அரசரையே ஆச்சரியப்படுத்தியது. இதனால் சேதுபதி அரசர் அவர்களுக்கு சூரக்கோட்டையில் போர் பயிற்சி அளித்து பின்னர் அரண்மனை காவல் பணியில் அமர்த்தினார். 1761 ஆம் ஆண்டு சிவகங்கை அரசர் முத்துவடுகநாத தேவரும் அரசி வேலுநாச்சியாரும் திறமையான இளைஞர்கள்  வேண்டுமென அரசர் விசயரகுநாத கிழவன் சேதுபதியிடம்   வேண்டுகோள் விடுத்தனர். அதற்கிணங்கி  சேதுபதி அரசர் மருது சகோதரர்களை சிவகங்கை சீமைக்கு அனுப்பினார். அங்கிருந்து அவர்கள் புகழ்பெற்ற வீரர்களாக உயர்ந்தனர்.1780 ஆம் ஆண்டு, வேலு நாச்சியார் தனது அரசுக்கு ஆண் வாரிசு இல்லாததால் மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, போரிலும் நிர்வாகத்திலும் துணையாக இருந்த மருது சகோதரர்களிடம் சிவகங்கை சீமையின் பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்தார். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்கள் அரசின் பிரதிநிதிகளாக ஆட்சி செய்ய வேண்டும் என்று அறிவித்தார். மக்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றனர். பின்னர் 1793 ஆம் ஆண்டு வேலுநாச்சியாரின் மகள் வெள்ளச்சி  நாச்சியார் இறந்தார்; 1796 ஆம் ஆண்டு வேலுநாச்சியாரும் மறைந்தார். அதன் பின்னர் பெரியமருது சிவகங்கை மன்னராகவும், சின்னமருது அமைச்சராகவும் தளபதியாகவும் இருந்து நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தனர்.

மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் மோதல் 

கிழக்கிந்திய கம்பெனி பல இந்திய அரசுகளை கைப்பற்றியது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.மருது சகோதரர்களின் வீரத்தால் வெள்ளையர்கள் நேரடியாக வெற்றி பெற முடியாமல் தக்க நேரத்தைக் காத்திருந்தனர். அந்த சமயம் வீரபாண்டிய கட்டபொம்மன் ஜக்கம்மாதேவி வழிபாட்டில் இருந்தபோது, எட்டப்பனின் துரோகத்தால் பானர்மேன் தலைமையில்ஆங்கிலப் படைகள் பாஞ்சாலங்குறிச்சியை தாக்கி கட்டபொம்மனையும் அவரது குடும்பத்தினரையும் கைது செய்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன் 1799-இல் தூக்கிலிடப்பட்டார். ஆனால் ஊமைத்துரை தப்பித்து சிவகங்கைக்கு  வந்து மருது சகோதரர்களிடம் உதவி கேட்டார். மருது சகோதரர்கள் அவரை பாதுகாத்ததுடன், உதயபெருமாள் தலைமையில் வீரர்களை அனுப்பி பாளையங்கோட்டைச் சிறையில் இருந்த கட்டபொம்மன் குடும்பத்தினரை மீட்டனர். இதனால் கோபமடைந்த ஆங்கிலேயர்கள் சிவகங்கை மீது படையெடுக்கத் திட்டமிட்டனர். பின்னர் ஊமைத்துரை தலைமையில் தூத்துக்குடி துறைமுகம் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இந்தச் சம்பவங்களால் மருது பாண்டியர்கள் ஆங்கிலேயர்களின் முக்கிய எதிரிகளாக கருதப்பட்டனர் இதனால் தென்னிந்திய எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றது. வெளிநாட்டு ஆட்சியை அகற்ற வேண்டிய அவசியத்தை மருது பாண்டியர்கள் உணர்ந்தனர்.

ஜம்புத்தீபம்:

பண்டைய காலத்தில் நாவல் பழத்தை ஜம்பு என்றும் மூன்று கடல் சூழ்ந்த பகுதியை தீபகற்பம் என்றும் குறிப்பிட்டனர் . நாவல் மரம் நிறைந்து மூன்று பக்கம் கடல் சூழ்ந்த இந்த மிகப்பெரிய இந்திய நிலப்பரப்பு ஜம்புத்தீபம் என்று வேதங்களிலும் குறிப்பிட படுகிறது தமிழில் நாவலன் தீவு என்றும் குறிப்பிட படுகிறது. ஜம்புத்தீபம் (Jambudweepa) என்பது இந்திய பாரம்பரிய நூல்களில் வரும் சொல்.புராணங்கள், ஜைன மற்றும் பௌத்த இலக்கியங்களில் ஜம்புத்தீபம் பாரத தேசம்  என்று குறிப்பிட படுகிறது 

சின்ன மருது வெளியிட்ட போர் பிரகடனம் 

சிவகங்கைப் போர் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. நவாப், தொண்டைமான், தஞ்சை மன்னன், இராமநாதபுரம் அரசர் உள்ளிட்ட பலர் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தபோதும், சிவகங்கைச் சீமை மட்டும் எதிர்த்து நின்றது. இதனால் ஆங்கில கம்பெனி சிவகங்கையை வீழ்த்த தீவிரமாக முயன்றது. இந்த சூழலில் ஊமைத்துரை தொண்டைமானுக்கு கடிதம் எழுதி, ஆங்கிலேயர்களுக்கு ஆதரவளிக்காமல் நாட்டைக் காப்பாற்ற தன்னுடன் சேருமாறு கேட்டுக் கொண்டான். அதே சமயம் சின்னமருது வரவிருக்கும் போருக்கு மக்களை ஒன்றிணைக்க பிரகடனம் ஒன்றை தயாரித்து திருவரங்கம் கோவில் மதில் சுவர் மற்றும் திருச்சி மலைக்கோட்டையில் 1801 ஜூன் 16 ஆம் ஒட்டினார் இப் பிரகடனமே ஆங்கிலேயர்களை அதிரசெய்த ஜம்புத்தீப பிரகடனம் 

 ஜம்புத்தீப பிரகடனம்:

ஜம்புத்தீப நாட்டிலும் அதன் தீபகற்பத்திலும் வாழுகின்ற அனைத்து இனத்தவருக்கும், உள்நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர சாதிகளாகப் பிளவுபட்டிருக்கும் மக்களுக்கும் முகமதியருக்கும், பொதுவான நலன்களைக் கருத்திற்கொண்டு இந்தப் போர் முழக்கம் வெளியிடப்படுகிறது.  நவாப் முகமது அலி முட்டாள்தனமாக உங்களுக்கு மத்தியில் ஆங்கிலேயருக்கு இம்மண்ணில் இடமளித்ததால் இம்மண்ணில் கைம்மை நிலை உருவாகிவிட்டது. ஆங்கிலேயர்கள் நேர்மைக்குப் புறம்பாக நவாப்பினுடைய ஆட்சியுரிமையைக் கைப்பற்றிக் கொண்டனர். உள்நாட்டு மக்களை நாய்களாகக் கருதி அவ்வாறே நடத்துகின்றனர். மேலே சொல்லப்பட்டபடி பல்வேறு அடிப்படையில் பிரிந்திருக்கக்கூடிய நீங்கள் உங்களுக்குள் ஒற்றுமையையும் நட்பையும் வளர்த்துக் கொள்ளாமல் ஆங்கிலேயர்கள் உங்கள் மத்தியில் ஆடுகின்ற இரட்டை நாடகத்தையும் புரிந்துகொள்ளாமல் உமக்குள் தீராப் பகைமையைப் பெருக்கிக் கொண்டதுடன் ஆட்சியையும் ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். அத்தகைய இழி பிறவிகளுடைய கைகளில் சிக்கிக்கொண்ட பகுதிகளில் மக்களுடைய வாழ்க்கை ஏழ்மையடைந்து உண்ணும் உணவுகூட அரிதாகிப் போய்விட்டது. மக்கள் பலவாறான துன்ப, துயரங்களுக்கு ஆட்பட்டபோதிலும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளையும் அறியாதவர்களாக இருக்கின்றனர். பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட மனிதன் ஒருநாள் மடியப் போவது உறுதி. அவர்கள் ஈட்டக்கூடிய புகழ், சந்திர சூரியர்கள் உள்ளவரை நிலைத்திருக்கும். ஆகவே இழந்துவிட்ட மரபு உரிமைகளை மீட்டெடுக்கும் விதத்தில் திட்டங்கள் வகுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. அதாவது  நவாப்பிற்கும் விஜய ராமநாத திருமலை நாயக்கருக்கும் தஞ்சாவூர் ராஜாவுக்கும் ஏனைய மன்னர்களுக்கும் அவரவர்களுடைய அரசுரிமை முழுமையாக ஒப்படைக்கப்படும். அனைவருக்கும் அவரவர்களுக்கும் உரிய உரிமைகள் சமய நம்பிக்கைக்கும் மரபு வழிப்பட்ட பழக்கவழக்கங்களுக்கும் முரணற்ற விதத்தில் முறையாக ஒப்படைக்கப்படவுள்ளன. நவாப்பைச் சார்ந்து சேவையாற்றுவதுடன் ஆங்கிலேயர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டு அதன்மூலம் அவர்களுடைய நிரந்தர மகிழ்ச்சிக்குக் குறைவின்றி வாழலாம். ஆங்கிலேயருடைய ஆட்சி முற்றாக அழித்தொழிக்கப்பட்டு விடுவதால் நாமும் துயரங்களற்று நிம்மதியாக வாழலாம். ஆகவே இந்த மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் தாம் வாழுகின்ற ஊர்களிலும் பாளையங்களிலும் ஆயுதங்களை இறுகப் பற்றிக்கொண்டு ஒன்றிணைந்து அந்த இழிபிறவிகளுடைய பெயரைக்கூட இம்மண்ணில் இல்லாதபடி செய்ய உறுதி பூண வேண்டும். அப்போதுதான் ஏழை எளியவர்கள் உயிர் வாழவே முடியும். எச்சில் வாழ்க்கை வாழுகின்ற நாய்களைப் போல அத்தகைய இழிபிறவிகளுக்குக் கீழ்படிந்து உயிர் சுமந்து திரிய யாரேனும் ஆசைப்படுவார்களேயானால் அவர்களைக் கருவறுக்க வேண்டும். அந்த இழிபிறவிகள் எத்தகைய சூழ்ச்சிகளால் இங்குள்ளவர்களைத் தம் வசப்படுத்திக் கொண்டு இந்த மண்ணை அடிமைப்படுத்தியுள்ளனர் என்பதை அனைவரும் அறிவீர்கள். ஆகவே பிராமணர்கள், சத்திரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள், முகமதியர்கள் என்றெல்லாம் பிளவுண்டு கிடக்கின்ற எம்மக்களே! திசை தவறிப் போய் இந்த இழி பிறவிகளுடைய படையில் சுபேதார்கள், ஹவில்தார்கள், நாயக்குகள், சிப்பாய்கள் என்று பட்டங்களைச் சுமந்தலுத்த, ஆயுதமேந்த வல்லவர்களே உங்களுடைய வீரத்தையும் தீரத்தையும் இப்படி வெளிப்படுத்துங்கள். அந்த இழிபிறவி இனத்தவரில் யாரையேனும் எங்கேனும் கண்டால் உடனே வெட்டி வீழ்த்துங்கள்; அவர்களுள் கடைசி ஆள் இருக்கும்வரை தொடருங்கள் அந்தத் திருப்பலியை. அந்த இழிபிறவிகளுக்குச் சேவை புரியக்கூடிய எவனும் செத்தால் சொர்க்கத்திற்குச் செல்லப் போவதில்லை என்பதை நானறிவேன். அதனைச் சிந்தித்து செயல்படுத்துங்கள். இதனைக் கருத்திற் கொள்ளாதவர்கள் தமது தோள்களிலும் மார்புகளிலும் மாட்டிக்கொண்டு திரிகின்ற பட்டங்களும் பதக்கங்களும் எனது மறைவிட மயிருக்குச் சமம். அவன் உண்ணும் உணவு கழிக்கப்பட்ட பொருள் அவனுடைய பெண்டும் பிள்ளைகளும் அவனுக்குரியவர்கள் அல்லர். அவன் கூட்டிக் கொடுத்த அந்த இழிபிறவிகளுக்குப் பிறந்தவர்களாகக் கருதப்படுவர். ஆகையால், நமது நாளங்களில் ஆங்கிலேயருடைய ரத்தத்தால் மாசு படாதோரெல்லாம் ஒன்றிணையுங்கள். இந்தச் சுவரொட்டியைப் படிப்போரும் கேட்போரும் தமது நண்பர்களுக்கும் ஏனையோருக்கும் பரப்புங்கள். இதே போன்ற சுவரொட்டிகளைத் தயாரித்துப் பரப்புரை செய்யுங்கள். அவ்வாறு இதில் கண்ட செய்திகளைப் பரப்புரை செய்யாதவன் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்திற்கு ஆளாகி நரகத்தின் அத்தனை சித்திரவதைகளுக்கும் ஆட்படுவான். இந்தப் பணியை மேற்கொள்ளாத முஸ்லீம் பன்றியின் ரத்தத்தைக் குடித்த பாவத்திற்கு ஆளாவான்.

இந்தச் சுவரொட்டியை இந்தச் சுவரிலிருந்து நீக்க முற்படுபவன் பஞ்சமா பாதகங்களைப் புரிந்த பாவத்திற்கு ஆளாவான். ஒவ்வொருவரும் இதனைப் படித்து நகலெடுத்துக் கொள்ளுங்கள்

இப்படிக்கு

மருதுபாண்டியன்

பரந்த எண்ணம்: 

சின்னமருது இப்பிரகடனத்தை சிவகங்கைக்கோ அல்லது தமிழகத்துக்கோ மட்டும் அல்ல அகண்ட இந்திய நாட்டிற்கும் அறிவித்தார்.  அதனால் தான் இதற்கு சிவகங்கை சீமை பிரகடனம் என்றோ தமிழக பிரகடனம் என்றோ அறிவிக்கவில்லை. இந்தியதீபகற்பதிலுள்ள ஒட்டுமொத்த மக்களும் ஆங்கிலேயர்களை எதிர்க்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தும் ஆங்கிலேயர்களுக்கு உதவுபவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் இந்த ஜம்புதீப பிரகடனம் இருந்தது.          

பிரகடனத்தின் எதிரொலி:

மக்கள் ஒற்றுமையை உருவாக்கியது.ஆயுதப் போராட்டத்தை ஊக்குவித்தது.ஆங்கிலேயர் ஆட்சியை நேரடியாக சவால் செய்தது.ஜம்புத்தீப பிரகடனம் சிவகங்கை,மதுரை,இராமநாதபுரம்,திருநெல்வேலி,திண்டுக்கல் பகுதிகளில் கிளர்ச்சியை ஊக்குவித்தது. இந்தப் போராட்டம் வரலாற்றில் தென்னிந்தியப் புரட்சி என அழைக்கப்படுகிறது.இந்தப் பிரகடனம் ஆங்கிலேயர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. ஜம்புத்தீப பிரகடத்தினால் அதிர்ந்த ஆங்கிலேயர்கள் உடனடியாக புரட்சிக்கு கரணமானவர்களான   மருதுபாண்டியர்களை அழிக்க வேண்டும் என்றெண்ணினர். அவர்களின் உள்ளூர் எதிரிகள் மூலம் சூழ்ச்சியாக சரணடைய வைத்தனர்.  1801 அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி மருது பாண்டியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் என 500 கும் மேற்பட்டோர் திருப்பத்தூரில் கொல்லப்பட்டனர். ஆனால் அவர்கள் செய்த ஆங்கிலேய எதிர்ப்பு அடுத்தடுத்த காலங்களில் பெரிய போராட்டங்களுக்கு வித்திட்டது ஆங்கிலேய எதிர்ப்பு நாடுமுழுவதும் பரவியது.

தலைமை செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!