புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் ஒளிபரப்பைத் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் (TACTV) திடீரென முடக்கியுள்ளதற்குச் சமூக ஊடகங்களில் வலத்து வரும் கண்டனக் குரல்கள்!!
தமிழகத்தில் புதியதாக ஆட்சியமைத்துள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, பதவியேற்ற வெறும் 18 நாட்களிலேயே எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 'புதிய தலைமுறை' தொலைக்காட்சியின் ஒளிபரப்பைத் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் (TACTV) திடீரென முடக்கியுள்ளதற்குச் சமூக ஊடகங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) 2017-ஆம் ஆண்டு விதிகளின்படி, எந்தவொரு சேவை நிறுவனமும் எழுத்துப்பூர்வமான மூன்று வார கால முன்னறிவிப்பு இன்றித் தொலைக்காட்சி சிக்னல்களைத் துண்டிக்கக் கூடாது என்ற தெளிவான சட்டம் அமலில் உள்ள நிலையில், இந்த விதியை முற்றிலும் மீறி ஒளிபரப்பு முடக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், ‘டிராய்’ மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதியைப் பெற்று, நூற்றுக்கணக்கான ஊழியர்களுடன் முறைப்படி இயங்கி வரும் ஒரு செய்தி ஊடகத்தின் தொழில் செய்யும் உரிமையையும் வாழ்வுரிமையையும் சிதைக்கும் வகையில், ஆடியோ-வீடியோ தரத்தைக் குறைத்தும், சேனல் வரிசையைப் பின்னுக்குத் தள்ளியும் மறைமுகமாக முடக்குவதற்கு அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் உத்தரவிடுவதை முதலமைச்சர் அனுமதிப்பது ஜனநாயகத்திற்கு அழகல்ல என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முறைப்படி அனுமதி பெற்ற ஒரு பெட்டிக்கடையைக் கூட சட்டவிரோதமாக ஒரே நாளில் அகற்ற முடியாத போது, 'ஃப்ரீ டூ ஏர்' (Free to Air) தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பு நிலைத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய கடமையைக் கொண்ட மாநிலத் தலைமைச் செயலாளர் இதில் தலையிட வேண்டும் என்றும், இந்த அராஜகமான செயலுக்கு எதிராகப் புதிய தலைமுறை நிர்வாகம் மத்திய உள்துறைச் செயலாளர், தகவல் ஒளிபரப்புத்துறைச் செயலாளர் மற்றும் ‘டிராய்’ தலைவருக்கு முறைப்படி புகார் அளித்துத் தங்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக