வாத்தி ரெய்டு பிஜிஎம் பாடல் பின்னணியில் மதுரை போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீட்சித் இருக்கும் ரீல்ஸ் வீடியோ!!
மதுரை மாவட்டம்,வாத்தி ரெய்டு பிஜிஎம் பாடல் பின்னணியில் மதுரை போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீட்சித் இருக்கும் ரீல்ஸ் வீடியோவை மதுரை மாநகர போலீசார் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற உடனேயே போதைப் பொருள்கள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக கையெழுத்திட்டார். மேலும் போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஆய்வு கூட்டங்களை நடத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அதிரடி நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மதுரை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 10ம் தேதி முதல் பல்வேறு கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துகள் கைப்பற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டன. அவனியாபுரம் மெயின் ரோடு வில்லாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு பகுதியில் 26 மூடைகளில் 461 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக பரத் வைஷ்ணவ் (35) என்பவர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாநகர காவல் துறை சார்பில் இந்த நடவடிக்கை தொடர்பாக முகநூலில் வெளியிடப்பட்ட வீடியோவில் முதலமைச்சர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் பின்னணி இசையுடன் (பிஜிஎம்) ரீல்ஸ் பதிவிடப்பட்டுள்ளது.இந்த ரீல்ஸ்சில் மதுரை போலீஸ் கமிஷனர் அபிஷேக் தீட்சித்தும் இடம் பெற்று இருந்தார். தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட கமிஷனர் லோகநாதன் இருந்த போது காவல் துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே இடம் பெறும் வீடியோக்களை வெளியிட்டு வந்திருந்தார். இதுபோன்ற எந்த சினிமா பாடல்களும் பின்னணியில் இடம் பெற்றதில்லை.
இந்த நிலையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்பாக அவர் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் பின்னணி இசையுடன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் தற்போதைய போலீஸ் கமிஷனர் மற்றும் போலீசாரும் விஜய் நடித்த படத்தின் பின்னணி இசையோடு ரீல்ஸ்கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரீல்ஸ் வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியதால் போலீசாருக்கான சமூக வலைதளத்திலிருந்து ரீல்ஸ் வீடியோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக