நடு ரோட்டில் படிகள் கட்டும் அளவுக்கு சட்டம் செத்துவிட்டதா?”பொதுப்பாதை ஆக்கிரமிப்பு சர்ச்சை – நடவடிக்கை எடுக்குமா நகராட்சி!!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில், மசூதிக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நடைபாதையை, ஒரு தனிநபர் ஆக்கிரமித்து நடு ரோட்டில் படிகள் அமைத்து மோட்டார் வைத்து தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்திருந்தனர்.
அந்த மனுவின் அடிப்படையில் வருவாய் ஆய்வாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதாகவும், அது பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நடைபாதை தான் என்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அறிக்கை திட்டக்குடி நகராட்சி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, பொதுப்பாதையை மீட்டு ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம்போல் கோப்புகளில் மட்டும் முடங்கிவிடுமா? என்ற கேள்வி தற்போது பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.
“பொதுமக்கள் பயன்பாட்டிற்கான பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? அதிகாரிகள் ஆய்வு செய்து உண்மை உறுதி செய்த பிறகும் நடவடிக்கை இல்லை என்றால் பொதுமக்கள் யாரை நம்புவது?” என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இப்போது அனைவரின் கவனமும் நகராட்சி நிர்வாகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையில்தான் உள்ளது. “ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? அல்லது அதிகாரப்பூர்வ ஆய்வும் காகிதத்தில் மட்டுமே முடிவடையுமா?” என்பதை பொதுமக்கள் பொறுத்திருந்து கவனித்து வருகின்றனர்.
கடலூர் செய்தியாளர் குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக