வடமாநில தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவு : முத்துக்கடையில் தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்!!
ராணிப்பேட்டை, மே. 12 - நாட்டின் தலைநகர் டெல்லி, நொய்டா, குருகிராம் (மனோசர்) மற்றும் பரிதாபாத் ஆகிய பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தேசிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் செவ்வாயன்று (மே. 12) சிஐடியு மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ் தலைமையில் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள், வடமாநிலங்களில் தொழிலாளர்கள் சந்திக்கும் இன்னல்களைப் பட்டியலிட்டனர்.குறிப்பாக நீண்ட வேலைநேரம், குறைந்த ஊதியம், கூடுதல் நேர வேலைக்கு இரட்டை ஊதியம் வழங்கப்படுவதில்லை. மேலும் போனஸ், வாராந்திர ஓய்வு மற்றும் வேலை பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்படுகின்றன.
கடந்த மூன்று மாதங்களாகப் போராடி வரும் 40,000 தொழிலாளர்களில், 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய்வழக்குகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் உள்ள பாஜக அரசுகளின் இத்தகைய "கொடூரமான அடக்குமுறைகளை" கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக மத்திய, மாநில அரசுகளுக்கு முன்வைக்கப்பட்ட முதன்மையான கோரிக்கைகள், குறைந்தபட்ச ஊதியமாக ₹26,000 வழங்கிட வேண்டும். கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும். தொழிலாளர் நலன்களுக்கு எதிரான புதிய சட்டத் தொகுப்புகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் என். ரமேஷ், விதொச மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் பி. மணி, மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கோதண்டபாணி, ரவிச்சந்திரன், மதியழகன், லோகநாதன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஏ. எஸ். சங்கர் மேஸ்திரி, மாவட்டத் தலைவர் சாம்பசிவம், நகர செயலாளர் பாட்ஷா பாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவாக ஏஐடியுசி மாவட்ட துணை செயலாளர் ஜி. பாலு நன்றி கூறினார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக