திட்டக்குடி அருகே பட்டப்பகலில் அரசு குட்டை மண் கொள்ளை! பள்ளி மாணவர்களை பயன்படுத்தி வண்டல் மண் அள்ளும் அதிர்ச்சி கும்பல்?
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஆதனூர் ஊராட்சியில், அரசுக்கு சொந்தமான குட்டையில் இருந்து அனுமதி இன்றி வண்டல் மண் டிப்பர் லாரிகளில் அள்ளிச் செல்லப்படுவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
அதிர்ச்சியளிக்கும் வகையில், 9 மற்றும் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களையே இந்த சட்டவிரோத மண் விற்பனையில் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள், மண் ஏற்றும் வேலையில் ஈடுபடுத்தப்படுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
“முன்னாள் ஆட்சியில் இரவு நேரங்களில் மறைமுகமாக நடந்த மண் கொள்ளை, தற்போது பகலிலேயே அச்சமின்றி நடைபெறுகிறது” என மக்கள் வேதனையுடன் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு நிலம் கொள்ளையடிக்கப்படுவது மட்டுமல்லாமல், பள்ளி மாணவர்கள் சட்டவிரோத செயல்களில் பயன்படுத்தப்படுவது எதிர்கால தலைமுறையையே பாதிக்கும் மிகப்பெரிய சமூக ஆபத்து என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வண்டல் மண் கொள்ளைக்கு பின்னால் உள்ள நபர்கள் யார்? அதிகாரிகள் ஏன் மௌனம் காக்கின்றனர்? மாவட்ட ஆட்சியாளர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுப்பார்களா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் தீவிரமாக எழுந்துள்ளது.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக