அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை சந்தித்த பாலியல் புகார் அர்ச்சகர் – எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் கடும் எதிர்ப்பு!!
சென்னை:பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்த காளிகாம்பாள் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி, புதிய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை நேரில் சந்தித்த சம்பவம் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் போது, கார்த்திக் முனுசாமியின் மனைவி அமைச்சருக்கு திருவிளக்கை பரிசளித்ததாக கூறப்படும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அருகில் கார்த்திக் முனுசாமியும், அமைச்சர் ரமேஷும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் முனுசாமி மீது, காளிகாம்பாள் கோவிலுக்கு வந்த பெண் தொலைக்காட்சி தொகுப்பாளருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பாலியல் வன்கொடுமை, கருக்கலைப்பு, கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
விசாரணை நடைபெற்று கொண்டிருந்த நிலையில் தலைமறைவான கார்த்திக் முனுசாமியை காவல்துறை கொடைக்கானலில் கைது செய்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
இந்நிலையில், மீண்டும் காளிகாம்பாள் கோவிலில் அர்ச்சகர் பணிக்கு திரும்ப முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கோவில் அறங்காவலர் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து சமூக ஆர்வலர் சாவித்திரி கண்ணன் வெளியிட்டுள்ள கருத்தில், “பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஒருவருக்கு அரசியல் மற்றும் சாதி ஆதரவின் மூலம் மீண்டும் அதிகாரப் பாதுகாப்பு கிடைக்கக் கூடாது. அறநிலையத் துறை அமைச்சர் இந்த விவகாரத்தை மிகவும் பொறுப்புடன் அணுக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “புனிதமான கோவில் சூழலுக்குள் குற்றச்சாட்டுக்குள்ளான நபர்கள் மீண்டும் நுழைவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். சமூக நீதி மற்றும் பெண்களின் பாதுகாப்பு முக்கியம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக