வாழ்க்கையின் எல்லாக் கவலைகளையும் தாண்டி வாழ்வின் மகிழ்ச்சியைத் தருவது வாசிப்பு-எழுத்தாளர் எஸ்.
புதுக்கோட்டை மாவட்டம்,மண்ணின் கதைகளையும் வரலாற்றையும் அடையாளப்படுத்த வேண்டியது வரலாற்றுத் தேவை என்றார் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்.
புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 3ஆம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகளை சனிக்கிழமை வழங்கி அவர் மேலும் பேசியது:
தொடர்ந்து புத்தகம் வாசிப்பவர்களுக்கு நினைவிழப்பு என்பது வரவே வராது. வாழ்க்கையின் எல்லாக் கவலைகளையும் தாண்டி வாழ்வின் மகிழ்ச்சியைத் தருவது வாசிப்பு.
அதிலும், கணவரும் மனைவியும் இணைந்து புத்தகம் வாசிப்பது என்பது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு. பெண்கள் கையில் புத்தகம் வருவதற்கு நீண்டகாலம் பிடித்தது. அதுபெரும் வரலாறு.
இங்கே விருதுபெறும் 10 பேரில் 4 பேர் பெண்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் ஒருவர் கூட இல்லாத காலம் இருந்தது. விரைவில் பெண்கள் எல்லாம் சேர்ந்து ஆண்களுக்கு விருது கொடுக்கும் காலம் வரும்.
நாம் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது. கதைக்கான அனுபவமும், இனிமையான மொழியும் தமிழுக்கு வாய்த்திருக்கிறது.
என்றைக்கோ ஷேக்ஸ்பியர் எழுதிய ஒரு கதை இன்றைக்கும் நம்முடைய வாழ்க்கையுடன் ஒத்துப்போகிறது என்றால் அதுதான் இலக்கியம்.
நம் காலத்தில் கற்பனைத் திறன் அருகி வருகிறது. கைப்பேசியில் இருந்தோ இணையத்தில் இருந்தோதான் கற்பனையைத் தேடுகிறோம். கற்பனையை உண்மைக்கு எதிரானது என்கிறார்கள். இன்றைய கற்பனைதான், நாளைய உண்மை.
உண்மையில் கற்பனை என்பது ஒரு நுட்பமான நுண்ணறிவு. மனிதர்களுக்கு மட்டும்தான் இப்படியொரு திறன் உள்ளது. பிற உயிரினங்களுக்கு கற்பனைத் திறன் கிடையாது.
ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட ஓவியங்களை, சிற்பங்களைப் பார்த்தவுடன் அவற்றில் நம் பெயரை எழுதிவிட்டு வருகிறோம். அவை நம் பண்பாட்டின் வரலாற்றின் அடையாளம் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.
நம் மண்ணின் கதைகளையும் வரலாற்றையும் கொண்டாட வேண்டும். அவற்றை அடையாளப்படுத்த வேண்டும். இதுதான் முக்கியமான வரலாற்றுத் தேவையாக இருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுத் திண்ணையில் கதை பேசிய பெரியவர்கள் இருந்தார்கள். இப்போது அதுபோன்றக் காட்சியைக் காண முடியவில்லை. கதைகளை உருவாக்கவும் கதைகளைப் பேசவும் தெரிந்து கொள்வதும் காலத்தின் தேவை. அதிலும் குறிப்பாக யாரை உலகம் கண்டுகொள்ளாதோ அவர்களைப் பற்றிய கதைகள் அவசியம் என்றார் எஸ். ராமகிருஷ்ணன்.
விழாவுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். முன்னதாக, இணைச் செயலர் சு. பீர்முகமது வரவேற்றார். செயலர் மகா சுந்தர் இணைப்புரை வழங்கினார். முடிவில், பொருளாளர். மு. கருப்பையா நன்றி கூறினார்.
விருது பெற்றோர் விவரம்:
நாவல்: சி. அன்னக்கொடி எழுதிய 'கூத்தின் சுவாசம்', மரபுக்கவிதை: புலவர் நாவை சிவம் எழுதிய 'செந்தமிழ் உணர்வுப்பூக்கள்', ஹைக்கூ: ஆழ்வார்குறிச்சி ப. சொக்கலிங்கம் எழுதிய 'கருவானிலொரு சிறுகீறல்'.
கட்டுரை (சமூகம், வரலாறு பிரிவு): கோ. லீலா எழுதிய 'சோறு- உணவு அரசியல்', மொழிபெயர்ப்பு நூல்: கயல் எழுதிய 'இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள்', சிறுகதை: ஆங்கரை பைரவி எழுதிய 'கோணவாச்சி'.
புதுக்கவிதை: துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய 'மகள் கையளித்த மயிற்பீலிகள்', சிறார் இலக்கியம்: ஈரோடு சர்மிளா எழுதிய 'வானி- இளையோர் நாவல்', கட்டுரை (கலை இலக்கியம்): இன்பா எழுதிய 'கடல் தாண்டிய சொற்கள்', சிறந்த சிற்றிதழ்- உதயசங்கர், மணிமாறனின் 'சிறுகதை' காலாண்டிதழ். வாசகர் விருதுகள்: ச. சுதந்திரராஜன், சா. விஸ்வநாதன்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக