பக்ரீத், திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
தியாகத் திருநாளான பக்ரீத் திருநாளில், என்றென்றும் என் நேசத்திற்கும் பாசத்திற்கும் உரியோராகத் திகழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய வாழ்த்துகள்! அவர்களது வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்!
“ஈத்துவக்கும் இன்பம்” என்று வள்ளுவப் பெருந்தகையால் போற்றப்பட்ட ஈகைப் பண்போடு, ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை, எளியோர் இன்னல் தீர வழங்கி மகிழ்வதை வாழ்வறமாகக் கொண்டு, நபிகள் நாயகம் வழங்கிய அறிவுரைகளை வாழ்க்கை நெறியாகக் கடைப்பிடித்து வாழும் இஸ்லாமியப் பெருமக்களது வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைபெறட்டும்.
இஸ்லாமிய சமூகத்திற்கும் திமுகவுக்கும் இடையேயான உறவு, அரசியல் மற்றும் சமூகக் காரணங்களைத் தாண்டிய ஆழத்தையும், மேன்மையையும், உண்மையான பிணைப்பையும் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் தோளோடு தோள் நின்று போராடும் உணர்வைக் கொண்ட உற்ற தோழமை என்பதை விவரிக்கத் தேவையில்லை. அந்த உறவும் நெருக்கமும் என்றென்றும் தொடரும் என்பதை, இந்த நன்னாளில் மேலும் உறுதி செய்ய விரும்புகிறேன்.
இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் உரித்தாக்குகிறேன்” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக