முதியோர் இல்லம் அனுப்பிய வேதனை - தம்பதி தற்கொலை!!
பெங்களூரு ஜே.பி. நகர் 8-வது வட்டாரத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி ராதா. இத்தம்பதியினருக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்பட்ட மகன், திருமணத்திற்குப் பிறகு தனது பெற்றோருடன் ஏற்பட்ட குடும்பச் சிக்கல்களால் அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார்.
திருமணத்திற்குப் பின், மருமகளுக்கும் மாமனார்-மாமியாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும், மகனின் மகிழ்ச்சிக்காகவும் கிருஷ்ணமூர்த்தியும் ராதாவும் அமைதி காத்தனர். இருப்பினும், ஒரு கட்டத்தில் மகன் அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்ப முடிவு செய்தார்.
தங்கள் மகன் தங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பியதை அந்தப் பெற்றோரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த அவர்கள், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர். "தங்கள் மகனுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை" என்ற எண்ணத்திலும், மகனின் எதிர்கால நலன் கருதியும் அவர்கள் அங்கேயே தற்கொலை செய்து கொண்டனர்.
"நாங்கள் அனுபவித்த இந்த வலி, என் மகனுக்கு ஒருபோதும் வரக்கூடாது" என்று அவர்கள் இறுதி நிமிடம் வரை நினைத்திருக்கக்கூடும் என்பதே அங்கிருந்தவர்களின் கருத்தாக உள்ளது.
கடைசி காலத்தில் தங்களுக்குப் பக்கபலமாக இருப்பார் என்று நம்பிய மகனே, தங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பிய அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் இந்தத் தம்பதியினர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பெற்றோரைச் சுமையாகக் கருதும் இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில், மகனின் நிம்மதிக்காகத் தங்கள் உயிரையே நீத்த இந்தப் பெற்றோரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக