குடியாத்தத்தில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் புலம்பல்!!


அறிவை விதைப்பவன் வயிற்றில் அடிக்கும் நவீன அடிமைத்தனம் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களின் ரத்தக் கண்ணீர்  05-04-2026 (பதிவு செய்த நாள்)படிக்காதவனுக்குக் கூட ஒரு நாளைக்கு 800 ரூபாய் கூலி கிடைக்குது நண்பர்களே,ஆனா M.Phil, B.Ed-ன்னு 17 வருஷம் படிச்சு முடிச்ச ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு மாசம் 8000 முதல் 12000 ரூபாய்தான் சம்பளமாக இருக்கிறது பல தனியார் பள்ளிகளில்.இது கல்வியா? இல்லை கல்வி நிலையங்கள் நடத்துற பகல் கொள்ளையா?ஒரு நாளைக்கு 300 ரூபாய் கூட சம்பளம் இல்லை.100 நாள் வேலைக்கு செல்பவர்களை விட மிகக் குறைவான சம்பளத்திற்கே ஆசிரியர்களின் உழைப்பை உறிஞ்சிகிறது இந்த தனியார் பள்ளிகள்.இந்த 8000 சம்பளத்திற்கே பள்ளிகளில் ராணுவக் கட்டுப்பாட்டை விதிக்கிறார்கள்.காலை 8:30 மணிக்கு எல்லாம் பள்ளியில் இருக்க வேண்டும்,மாலை 6 மணிக்கு தான் வீட்டிற்கு செல்ல வேண்டும்,8 பாட வேளைகளும் குரல்வளை நொறுங்கும் அளவிற்கு மாணவர்களுடன் கத்த வேண்டும் என ஆரியர்களை சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்துவார்கள்.8000 ரூபாய் சம்பளத்தை வைத்துக் கொண்டு வண்டிக்கு பெட்ரோல் போடுவதா?வாடகை கொடுப்பதா?நல்ல சாப்பாடு தான் சாப்பிட முடியுமா ?குடும்பத்துடன் வெளியில் செல்ல முடியுமா? இப்படி முடியுமா? முடியுமா? என பல  கேள்விகளை அடுக்கிக் கொண்டே சென்றால் இந்தப் பதிவை முடிக்க முடியுமா?

நண்பர்களே நீங்கள் நினைக்கலாம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று வெளியே போகும்போது 'டீச்சர்'ங்கிற கௌரவமான பேரு மட்டும் தான் கிடைக்கும்.ஆனா வீட்டுக்குள்ள வந்தா வாடகை கொடுக்க முடியாம, மளிகைக் கடைக்காரன் கிட்ட கடன் கேட்டு நிக்கிற அவலம். சாக்பீஸ் தூசியைச் சுவாசிச்சு நுரையீரலைச் கெடுத்துக்குற இவங்களுக்கு, அவசரத்துக்கு ஒரு மருத்துவச் செலவு வந்தா கூட கையேந்த வேண்டிய நிலைதான் இருக்கு. இது ஒரு 'கௌரவமான பிச்சை எடுக்கும்' நிலையைத் தவிர வேறென்ன?பெரிய கார்ப்பரேட் பள்ளிகள் கல்வியை ஒரு 'சரக்கா' (Commodity) மாத்திடுச்சு. அங்க வேலை செய்யுற ஆசிரியர்களை வெறும் 'மெஷின்' மாதிரி பார்க்குறாங்க. காலையில 8 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை, அப்புறம் வீட்டுக்கு வந்தா பேப்பர் திருத்துற வேலை. இவ்வளவு உழைப்பையும் உறிஞ்சிட்டு, 10,000 ரூபாயைத் தூக்கிப் போடுறது அப்பட்டமான வர்க்கச் சுரண்டல் பல ஆசிரியர்கள் அவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் தினமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.அறிவைச் சொல்லிக் கொடுப்பவன் பசியில இருக்கும்போது, அந்த நாடு எப்படி முன்னேறும்? அரசு நிர்ணயிச்ச குறைந்தபட்ச ஊதியத்தைக் கூட இந்தத் தனியார் பள்ளிகள் கொடுக்கிறதில்லை. 

பல பள்ளிகள் டீச்சர்களோட ஒரிஜினல் சர்டிபிகேட்டை வாங்கி வச்சுக்கிட்டு "பணயக்கைதி" மாதிரி நடத்துறாங்க. சம்பளம் வரலன்னு வெளிய போக நினைச்சாலும் சர்டிபிகேட்டை வச்சு மிரட்டுறாங்க. இது அப்பட்டமான சட்டவிரோதம். பல வருடங்கள் படித்து பட்டம் வாங்கி பள்ளியில் ஆசிரியர்களாக சேர்ந்தால்,அவர்களை அடிமைகளாக மாற்றி 8000 ரூபாய் கூலிக்காக உழைப்பை உறிஞ்சுவது உழைப்பு சுரண்டலின் உச்சம்.ஒரு சாதாரணக் கூலித் தொழிலாளி தன் கஷ்டத்தை வெளிய சொல்லி அழ முடியும். ஆனா, "டீச்சர்" அப்படிங்கிற அந்த ஒற்றை வார்த்தை, இவங்களை வறுமையைக் கூட வெளிய சொல்ல முடியாம ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் ஒரு தேசத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் சிற்பிகள் இன்று கொத்தடிமைகளாக இருக்கிறார்கள்.இதை எல்லாம் தேர்தலுக்கு தேர்தல் ஓட்டுப் பிச்சை எடுக்கும் எந்த கட்சிகளாவது கேட்குமா?இவர்களால் தீர்வைத் தான் தேடி தர முடியுமா?

சம்பளம் கூடுதலாக கேட்டால் எக்ஸ்பீரியன்ஸ் இல்லன்னு சொல்றீங்களே... ஆனா சிலபஸ் ஒன்னு தான், எடுக்கிற பாடம் ஒன்னு தான், வேலை நேரமும் ஒன்னு தான்! அப்போ சம்பளம் மட்டும் ஏன் கம்மி? சம வேலைக்கு சம ஊதியம் வேணும் சரி இதற்கு என்ன தான் தீர்வு?அரசு தலையிட்டு B.Ed, M.Phil முடித்த ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் ₹25,000 சம்பளம் எனச் சட்டமாக்க வேண்டும். இதை மீறும் பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்! அனுபவம் இல்லை" என்று கூறி சம்பளத்தைக் குறைப்பதைக் கண்காணிக்கத் தனி வாரியம் அமைக்க வேண்டும். "சம வேலைக்கு சம ஊதியம்" என்பதே தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.தனிமரம் தோப்பாகாது". ஆசிரியர்கள் தங்களுக்குள் வலிமையான சங்கத்தை அமைத்துப் போராடினால் மட்டுமே இந்த முதலாளித்துவச் சுரண்டலை வேரறுக்க முடியும்! ஓட்டுப் பிச்சை எடுக்கும்போது மட்டும் வர்க்கப் பாசம் பேசும் அரசியல் கட்சிகளே... அறிவுப்பசியைப் போக்கும் ஆசிரியர்களின் வயிற்றுப்பசி உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? இல்லை, கல்வித் தந்தைகளின் கல்லாப் பெட்டிகள் உங்கள் கண்களை மறைக்கின்றனவா?

குடியாத்தம் செய்தியாளர் கே. வி ராஜேந்திரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!