சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா இயக்குநர் பாண்டிராஜ் பங்கேற்று பரிசுகள் வழங்கி உரை!!


திருமயம் அரசமபட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா மற்றும் விளையாட்டு விழா ஆகியவை ஏப்ரல்-25 சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு வரவேற்றார். கல்லூரி புலத் தலைவர் டாக்டர் மகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கி பேசினார். கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன் தலைமை வகித்து உரையாற்றினார். கல்லூரி இயக்குநர் ம.பிச்சப்பா, செயலர் மு.விஸ்வநாதன் ஆகியோர் விழாவுக்கு முன்னிலை வகித்தனர். 

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :

ஒருவர் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதற்கான இலக்கிலிருந்து சிறிதும் பின்வாங்கக்கூடாது. அப்படி தனது இலட்சிய பயணத்தை ஒருவர் தொடர்ந்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். அதற்கான சாட்சியாகத்தான் நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். 12 ஆம் வகுப்பை முடித்துவிட்டு அடுத்து கல்லூரி படிப்பை படிப்பதற்குகூட வழியில்லாமல் நான் வாழ்க்கைப் போராட்டத்தில் களமிறங்கியவன். நான் 15 ஆண்டுகள் வாழ்வில் அனைத்துவிதமான கேலிகளையும் கிண்டல்களையும் அவமானங்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர்களின் அத்தனை ஏளனங்களையும் நான் வலி சுமந்த புன்னகையோடு கடந்து சென்று, கடைசியில் அவர்களுக்கு என் வெற்றி மூலம் பதிலடி கொடுத்திருக்கிறேன். 

 என்னை அதிகம் கேலி செய்த என் சொந்த ஊரில் என்னை யார் என்று நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் எனது முதல் திரைப்படத்தை எனது சொந்த ஊரிலேயே படப்பிடிப்பு நடத்தி அதில் தேசிய விருதுவரை பெற்றேன். எனவே யாருடைய கிண்டல், கேலிகளையும் ஒருபோதும் பொருட்படுத்தாதீர்கள். நீங்கள் உங்களை நம்புங்கள். உங்களின் பலம் என்பது மற்றவர்களைவிட உங்களுக்குத்தான் அதிகம் தெரியும். எனவே எதற்கும் தயங்காமல், சளைக்காமல் களமாடுங்கள். நீங்கள் சிந்துகிற ஒவ்வொரு வியர்வையும், திட்டமிட்ட உழைப்பும் கட்டாயம் வெற்றியைத் தரும். நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதை இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். 

யாரிடமும் பேசுவதற்கும், உங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கும் ஒருபோதும் தயங்காதீர்கள். தயக்கமும் கூச்சமும்தான் பல மனிதர்களின் வெற்றிக்கு தடைக்கற்களாக இருக்கிறது. அதை எல்லாம் உடைத்து எறியுங்கள். நீங்கள் தாங்கிக் கொள்ளும் வலிகள்தான் உங்களின் வாழ்க்கையைச் செதுக்கும் உளிகள், ஒவ்வொருவரும் வாழ்வில் நல்ல பழக்கத்தை பழகிக் கொள்ளுங்கள். வெற்றி என்பது எல்லோருக்கும் சொந்தமானது. அதற்காக உழைப்பவர்கள் அந்த வெற்றியைப் பெறுகிறார்கள். மற்றவர்கள் கடைசிவரை மற்றவர்களின் வெற்றியை வேடிக்கை பார்த்துக் கொண்டே காலம் கழித்துவிடுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். இதனை தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் அனைத்து துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ,மாணவியர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அஜித் நன்றி கூறினார். 

படம் : திருமயம், அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கி உரையாற்றினார். உடன் கல்லூரி தாளாளர் டாக்டர் பிச்சப்பா மணிகண்டன்,  நிர்வாக இயக்குநர் பிச்சப்பா, செயலர் மு. விஸ்வநாதன், முதல்வழ் குழ.முத்துராமு ஆகியோர்.

புதுக்கோட்டை செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!