தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 -ற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 13,22,759 ஆண் வாக்காளர்கள், 14,21,179 பெண் வாக்காளர்கள், 534 இதர வாக்காளர்கள் என மொத்தம் 27,44,472 வாக்காளர்கள் உள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 3540 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மாதிரி வாக்குச்சாவடி, ஒரு பெண் பணியாளர்களால் நிர்வகிக்கும் வாக்குச்சாவடி மற்றும் ஒரு இளையோர்களால் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்தமுள்ள 3540 வாக்குச்சாவடிகளில், 182 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சுமூகமான வாக்குப்பதிவிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவினை கண்காணித்திடும் வகையில் இணையவழி நேரலை செய்திட வெப்-கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 70 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு, நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 16,992 வாக்குப்பதிவு அலுவலர்களும், பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு 95 நுண்பார்வையாளர்களும், இணையவழி கிடைக்கப்பெறாத வாக்குச்சாடிகளுக்கு 70 நுண்பார்வையாளர்களும் மற்றும் 6240 காவல்துறை அலுவலர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களித்திட ஏதுவாக அனைத்து அடிப்படை வசதிகள், உள்ளாட்சி துறை மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் செய்யகப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்காளர்கள் கட்டணமில்லா வாகன வசதிக்காக, சக்ஷம் செயலி அல்லது 1950 எனும் மாவட்ட தொடர்பு மைய எண் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு, வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்திட வாகன வசதி வழங்கப்படுகிறது.
இச்சேவைக்கென சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்கு குறைந்தபட்சம் 3 வாகனங்கள் வீதம் மொத்தம் 39 நான்கு சக்கர இலகுரக வாகனங்கள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்குபதிவு அமைதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையாக நடைபெறவும், வாக்காளர்கள் அனைவரும் எவ்வித அச்சமும், சிரமமும் இன்றி வாக்களிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களும் தவறாது தங்கள் வாக்கினை செலுத்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் IAS அவர்கள் அரசு கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு செலுத்தினார்.
சாதாரன சாமானிய மக்களை போல, அவரும் வாக்காளர் வரிசையில் நின்று வாக்கு செலுத்த காத்திருந்தார். வாக்குச்சாவடி எண் 73"ல் வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினார்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.


கருத்துகள்
கருத்துரையிடுக