நத்தம்: உடலில் பதாகை கட்டி 100% வாக்குப்பதிவுக்கு வலியுறுத்திய சமூக ஆர்வலர்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் வாக்காளர்களிடையே தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், உடலில் பதாகைகளை கட்டிக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் ஒருவர் கவனத்தை ஈர்த்துள்ளார்.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகிலுள்ள வலைச்சேரிபட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர், 100 சதவீத வாக்குகளை வாக்குச்சாவடியில் செலுத்த வலியுறுத்தியும், பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்காமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உடலில் பதாகைகளை ஏந்தியபடி அவர் மேற்கொண்ட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில், “பணம் பொருள் கொடுப்பதும் வாங்குவதும் சட்டவிரோத செயல்”, “தியாகிகள் உயிர் கொடுத்ததால் கிடைத்த சுதந்திரம் - மனசாட்சிப்படி வாக்களிப்பது நமது உரிமை”, “ஓட்டுக்கு பணம் ஒரு நாள் கொண்டாட்டம் - ஐந்தாண்டு திண்டாட்டம்”, “ஜனநாயகத்தை உயர்த்த வேண்டும் - பணம் நாயகத்தை வீழ்த்த வேண்டும்”, “வாக்குரிமை நமது உரிமை - வாக்களிப்பது நமது கடமை - நூறு சதவீதம் வாக்களிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 19 ஆண்டுகளாக மதிவண்டி மற்றும் நடைபயணம் மூலம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தி வரும் சரவணன், இந்த முறையும் நத்தம் பகுதியில் இத்தகைய தனித்துவமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் நடைமுறையில் நேர்மை மற்றும் அதிக வாக்குப்பதிவை ஊக்குவிக்கும் இத்தகைய முயற்சிகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்த மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக