அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களுக்கு MCMC குழுவின் முன்அனுமதி கட்டாயம்! ஜெ.யு.சந்திரகலா IAS !!
ராணிப்பேட்டை மாவட்டம்,தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026: அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களுக்கு MCMC குழுவின் முன்அனுமதி கட்டாயம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா இ.ஆ.ப., அவர்கள் தகவல்!
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 - ஐ, முன்னிட்டு, இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் "ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு" (MCMC) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ள வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:
1. மின்னணு மற்றும் சமூக ஊடகங்களுக்கான விதிகள் (Electronic & Social Media):
தொலைக்காட்சி, உள்ளூர் கேபிள் டிவி, வானொலி (FM), சமூக வலைத்தளங்கள் (Facebook, X, Instagram, YouTube), இணையதளங்கள், திரையரங்குகள், பொது இடங்களிலுள்ள டிஜிட்டல் திரைகள் மற்றும் மொபைல் போன் வழி குறுஞ்செய்திகள் (Bulk SMS), குரல் வழி அழைப்புகள் (Voice Calls) ஆகியவற்றில் விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் MCMC அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் காலக்கெடு:
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்: விளம்பரம் வெளியிட உத்தேசித்துள்ள நாளுக்குக் குறைந்தது 3 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் இதர அமைப்புகள்: குறைந்தது 7 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.
2. அச்சு ஊடகங்களுக்கான விதிகள் (Print Media - நாளிதழ்கள்):
சாதாரண நாட்களில் நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு முன்அனுமதி தேவையில்லை ஆனால், விளம்பர செலவினங்கள் நாள்தோறும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினால் (MCMC) கண்காணிக்கப்பட்டு கணக்கீடு செய்து வேட்பாளர் கணக்கில் அதற்கான செலவினங்கள் சேர்க்கப்படும்.
வாக்குப்பதிவு நாளான 23.4.2026 (Poll Day) மற்றும் அதற்கு முந்தைய நாள் 22.4.2026 (Poll Day-1) ஆகிய இரண்டு தினங்களில் வேட்பாளரோ அல்லது அரசியல் கட்சியின் சார்பாக நாளிதழ்களில் வெளியிடும் அனைத்து விளம்பரங்களுக்கும் 2 நாட்களுக்கு (48 மணி நேரத்திற்கு) முன்னதாகவே கட்டாயம் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) விண்ணப்பித்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
3. விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஆவணங்கள்:
விண்ணப்பதாரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் MCMC அலுவலகத்தில் கீழ்க்கண்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்:
உரிய படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்.
விளம்பரத்தின் மாதிரி நகல் (வீடியோ/ஆடியோ எனில் CD/Pendrive-ல் 2 பிரதிகள்; அச்சு விளம்பரம் எனில் மாதிரி தாள்).
விளம்பரத்தின் உரை (Script) மற்றும் உத்தேச செலவு மதிப்பீடு.
விளம்பரம் யாரையும் புண்படுத்தும் விதமாக இல்லை என்பதற்கான உறுதிமொழி
4. சட்ட நடவடிக்கை மற்றும் கண்காணிப்பு:
அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடுவது மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது தேர்தல் விதிமீறலாகும். அனுமதிக்கப்படாத விளம்பரங்கள் கண்டறியப்பட்டால், அதன் செலவினம் வேட்பாளரின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
எனவே, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் இந்த நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். மேலும், விளம்பரங்கள் வெளியிடும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி ஊடகத் துறையினரும் இதில் தனி கவனம் செலுத்தி தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக