தேர்தலில் போட்டியிடாதது ஏன்? – திமுக சின்னத்தில் போட்டியிட சொன்னதால் கமல் ஹாசன் முடிவு!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை: இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை.

அவர்களது தரப்பில் அதற்கான நியாயம் இருக்கிறது என்பதை நான் முழுமையாகப் புரிந்துகொள்கிறேன். எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டுமென மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்துகொண்டிருக்கும் சூழலில் கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது. நியாயமானதும் கூட. 

ஆனால், பேட்டரி டார்ச் சின்னத்துடனான மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. ஏனெனில், பேட்டரி டார்ச் என்பது எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக எந்த ஆதாயமும் இன்றி என்னோடு பயணிக்கும் என் தொண்டர்களின் உணர்வுகளை என்னால் புறக்கணிக்க முடியாது; புறக்கணிக்கவும் மாட்டேன்.

தமிழ்நாட்டின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு, தமிழ் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நெருக்கடியான சூழலில், எங்கே எங்கள் பங்கு என்று கேட்பது நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல;பொறுமை.

தேர்தல் அரசியலில் யாருமே இப்படி செய்ததில்லையே என்று கேட்பீர்களானால், ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை நான் போட்டது என்று பணிவோடு சொல்வேன். முதல்வர் அவர்கள் அன்போடு அளிப்பதை பெருமையோடு மறுப்பதும் அன்பின் வடிவமே.

தங்கள் குடும்பத்துக்காக எத்தனையோ பேர் தன் வீட்டை விட்டு, ஊரை விட்டு, நாட்டை விட்டு எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். தமிழ்நாடுதான் என் குடும்பம். நான் சீட்டுகளை விட்டுக்கொடுத்திருக்கிறேன்.

ஆகவே 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என்கிற முடிவை திறந்த மனதுடன், தெளிந்த உள்ளத்துடனும் அறிவிக்கிறோம்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!