யுகாதி திருநாள்: வாழ்வின் அறுசுவையை வரவேற்கும் புத்தாண்டு!!
'யுகாதி' என்பது காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு மங்கலச் சொல்லாகும்; பிரம்மதேவன் இந்தச் சைத்ர மாத முதல் நாளில்தான் உலகைப் படைக்கத் தொடங்கினார் என்று பிரம்ம புராணம் கூறுகிறது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் வசிக்கும் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களால் இந்தப் புத்தாண்டு உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மராட்டியத்தில் 'குடிபாட்வா' என்றும், சிந்திகளால் 'சேதி சந்த்' என்றும் அழைக்கப்படும் இந்நாளின் சிறப்பம்சமே, அறுசுவை கலந்த 'யுகாதி பச்சடி' (பேவு பெல்லா) ஆகும். இனிப்பு, கசப்பு, காரம், புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அனைத்தும் கலந்த இந்தப் பச்சடி, மனித வாழ்க்கையில் ஏற்படும் இன்ப-துன்பங்கள், வெற்றி-தோல்விகளைச் சமமாக ஏற்று முன்னேற வேண்டும் என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இன்றைய தினம் அதிகாலையில் நீராடி, கௌரி விரதமிருந்து, பூஜையறையில் புதிய பஞ்சாங்கத்தை வைத்து வழிபடுவதோடு, குடும்பத் தலைவர் 'பஞ்சாங்க படனம்' மூலம் அந்த ஆண்டின் பலன்களை வாசிப்பது மரபாகும். இளவேனிற்காலத்தின் வருகையை அறிவிக்கும் இந்தத் திருநாளில், மக்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கி, கலை நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக