நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி விழா!30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவையொட்டி செவ்வாய்கிழமை பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி மாலையில் தொடங்கி நள்ளிரவு வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கினர். இதையொட்டி செவ்வாய்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் அலகு குத்தி அக்னிச்சட்டி எடுத்தல் , சேறு பூசி பூச்சாண்டி வேடமிடுதல், உடல் முழுவது எலுமிச்சம் பழத்தை குத்தி தேர் இழுத்த வண்ணம் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பறவைக் காவடி எடுத்தும் பக்தர்கள் வந்தனர். தொடர்ந்து காலை காந்திநகர் பொதுமக்களால் கழுகுமரம் (வழுக்குமரம்) ஊன்றப்பட்டு பிற்பகலில் காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகுமரம்(வழுக்குமரம்)
ஏறும் நிகழ்ச்சியைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட பூக்குழியில் கோயில் பூசாரி இறங்கியதை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கினர். இந்நிகழ்வு நள்ளிரவு வரை நடந்தது. இதில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோ இறங்கினர். பின்னர் இரவு கம்பம் கோயிலிலிருந்து எடுத்து செல்லப்பட்டு அம்மன் குளத்தில் கொண்டு போய் விடப்பட்டது. புதன்கிழமை காலை அம்பாள் மஞ்சள் நீராடுதல் நடைபெறுவதைத் தொடர்ந்து இரவு சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக செல்லும். அப்பொழுது பக்தர்கள் ஆங்காங்கே திரண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபடுவதை தொடர்ந்து நாளை அதிகாலை அம்மன் கோயிலைச் சென்றடைவதுடன் திருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை கோயில் செயல் அலுவலர் பாலசரவணன், பரம்பரை பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்சா ஆலோசனையின் பேரில் செயல் அலுவலர் விஜயநாத் வழிகாட்டுதல் படி பணியாளர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.




கருத்துகள்
கருத்துரையிடுக