பெரியகுளம் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் - நகராட்சி பகுதிகளில் 2 நாட்களாக சாலைகளில் தேங்கிய கழிவுகளால் துர்நாற்றம் பரவுவதோடு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படவுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!
தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டு பகுதிகளிலும் தினந்தோறும் கழிவுகளை சேகரிப்பதற்காக நகராட்சி அலுவலகத்தில் 6 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 86 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் . தேனி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி அலுவலகங்களிலும் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 04 தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வந்த 86 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் உள்ள சாலைகளில் கழிவு பொருட்கள் அதிக அளவில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் அதிக துர்நாற்றம் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இன்றுடன் இரண்டு நாட்கள் ஆன நிலையில் பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தினர் கழிவு பொருட்களை அகற்றாமல் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் வகையில் மெத்தனமாக செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர்.கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்மை நோய் போன்ற பல்வேறு நோய்கள் வேகமாக பரவி வரும் நிலையில் பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தின் இத்தகைய செயலால் பொதுமக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர் . பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேனி மாவட்ட நிர்வாகம் கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு செய்து பொதுமக்களை பாதுகாத்திட பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக