நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!!
தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்றது நத்தம் மாரியம்மன் கோவில்.இந்த கோவிலில் மாசி மாதம் அதிவிமரிசையாக 15 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாரியம்மன் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவிலை சுற்றி வந்து சிறப்பு பூஜைகள் நடத்தி கோவில் முன் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் கொடிமரம், நாணல்புல், மாவிலை, வண்ண பூமாலைகள் இணைத்து மாரியம்மன் உருவம்பொரித்த கொடி ஏற்றப்பட்டு கொடி மரத்திற்கு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மூலவர் மாரியம்மன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நாளை செவ்வாய்கிழமை அதிகாலையில் நத்தம் அருகே உள்ள கரந்தமலையில் கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து சந்தன கருப்புசுவாமி கோவிலில் பக்தர்கள் ஒன்று கூடுவர். தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் தலையில் தீர்த்த குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவர்.பின்னர் அங்கு மஞ்சள் காப்பு கட்டி பக்தர்கள் 15 நாட்கள் விரதம் தொடங்குவார்கள். திருவிழாவின் முக்கிய நிகழ்வான கழுகுமரம் ஏறுதல்,அக்னி சட்டி எடுத்தல், பூக்குழி திருவிழா வருகிற மார்ச் மாதம் 10-ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் செயல்அலுவலர் பாலசரவணன், திருக்கோவில் பரம்பரை பூசாரிகள் கணேஷ், சின்னராஜ், கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்,யுவராஜ், தினேஷ்குமார், புருஷோத்தமன், முத்துக்குமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்


கருத்துகள்
கருத்துரையிடுக