அக்கினியாறு விழுங்கிய ஆதித்த கரிகாலன் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம்,அறந்தாங்கி அரசுக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர் தொல்லியல் வரலாற்றுக் கல்வெட்டு ஆய்வாளர் பேராசிரியர் முனைவர். கா. காளிதாஸ் மற்றும் சாலை கலையரசன் ஆகியோர் கொண்ட வரலாற்று ஆய்வுக் குழுவினர் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியில் வரலாற்று ஆய்வு மேற்கொண்டபோது, இவ்வூரில் வாழும் முருகன் என்ற முதியவர் கொடுத்த தகவலின்படி அக்கினி ஆற்றில் உள்ள கலிங்கில் ஆதித்த சோழன் மற்றும் ராஜராஜ சோழன் கல்வெட்டுகள் கொண்ட உடைந்த கற்களைக் கொண்டு இக்கலிங்கு கட்டி உள்ளதைக் கண்டறிந்தனர். இது பற்றி ஆய்வாளர் காளிதாஸ் கூறியதாவது, குளத்தூரை ஆட்சி செய்த நமணத் தொண்டமான் ( ) குடிமக்கள் நலன் கருதி நீர்நிலை மேலாண்மைக்காக இக் கலிங்கைக் கட்டியுள்ளார். புதுக்கோட்டை வரலாற்று நூலில், "குளத்தூர் நமணத் தொண்டமான் பெருங்கொடையாளர். குளத்தூரில் சிவன் திருமால் கோயில்களை கட்டினார். பேராம்பூர் கணேசர் கோயிலுக்குக் கொடை கொடுத்த செய்தியை (1713) அங்குள்ள கல்வெட்டால் அறியலாம். குளத்தூர் பெரிய குளத்திற்கு அக்கினியாற்றில் கலிங்கு கட்டியுள்ளார். அந்தணர் பலருக்கு சர்வ மானிய நிலக்கொடை அளித்த செய்திகளை" செப்பேடுகள் மூலமாக அறிய முடிகிறது. மேலும், குளத்தூர் ஏரியில் உள்ள இவரது கல்வெட்டில் " ஸ்ரீ மது ரெங்க கிருஷ்ண முத்து வீர நமணத் தொண்டமானார்" என்று உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அக்கினியாறு விழுங்கிய ஆதித்த கரிகாலன் கல்வெட்டுகள்:
அக்கினியாற்றின் கலிங்குக் கட்டில்உள்ள கற்களிலுள்ள கல்வெட்டுகளில், சோழவள நாட்டு ஆதித்த சோழன் என வருவதாலும், ராசராச பெருந்தெரு என வருவதாலும் இக்கல்வெட்டுகள் *கரிகால் சோழனுடையது* எனலாம். சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்தகரிகாலன்(கி.பி 956-969), ராஜராஜ சோழனின் சகோதரன். பாண்டிய மன்னர்களில் வீரபாண்டியன் என்பவனைச் சேவூர் (செவ்வூர்)ப் போரில் தோற்கடித்து கொன்று தலை கொய்து கோப்பரகேசரி வர்மன் என்ற சிறப்பு பெயருடன் திகழ்ந்தவன். கல்வெட்டில் ஆலத்தூர் என்று வருவதால், திருவாலத்தூர் (மலையடிப்பட்டி)இவ்வூரில் அழிந்துபட்ட சிவன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளாக இவை இருக்கலாம்.
கல்வெட்டுகளில் காணப்பெறும் அரசப் பிரதிநிதிகள்/ குறுநில மன்னர்கள்.
கல்வெட்டுகளில் காணப்படும் அரசப் பிரதிநிதிகள் மற்றும் குறுநிலத் தலைவர்களின் பெயர்கள்.
1. தேவாதிப் பரையன்
2. வடக்கூறு வயல் நாட்டு மத்தயச்சன்
3. ஆவுடையான் பயிற்றாதன் கூத்தன்
4. ஆழ்வான்
5. பதிவிரதான்
6. வியாபாரி பணிப்பன்
7. மிலட்டூருடையான் கூத்தன் சிவன்
8. குலோத்துங்க சோழபுரத்து மிலட்டூருடையான் பட்டமுடையான் சொக்கன்
9. ராசராசப் பெருந்தெருவில் திருவாழ்வான் உலகுடையான்
10. அழகன் பெருமாள்
11. கிளியூர் நாட்டு ஆளுவித்த நாயகர்
12. அழகு பத்தர்
13. குளத்தூர் உடையான் ஆதித்த தேவன் நம்பி
14. பூந்தாழ நாட்டு வேளாண்
15. பெருந்தெருவில் வரு குடையான் கூத்தனான் தேவன் சூரிய தேவன்
16. வேல் உடையான்
17. வெள்ளுடையான் திருச்சிற்றம்பலவன்
போன்ற பெயர்களைக் காண்கிறோம். மேலும் இவ்வூர் ராசராச பெருந்தெருவில் வணிகம் நடைபெற்றதையும் பாக்குப் பொதி, மஞ்சள், வெற்றிலை, கரும்பு, குங்கிலியம்(சாம்பிராணி), உப்பு போன்றவற்றிற்கு விதிக்கப்பட்ட வரித் தீர்வையும், வரித் தீர்வைகள் அரைக்காசு, ஒரு காசு, காசு ஐந்து , செப்புப் பொன் போன்ற முறையில் விதிக்கப்பட்டதையுயும் இக்கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
நாட்டின் நலனுக்காகக் கரிகாலன் கல்லணை கட்டினான் . நமணத் தொண்டமான் கரிகாலனின் மெய்கீர்த்திக் கல்வெட்டுகளை அக்கினி ஆற்றில் கலிங்கு கட்டினான். இருவரும் நாட்டு மக்கள் நலன் கருதி நீர்ப்பாசன வளம் செழிக்க அறப்பணி மேற்கொண்டனர். என்றார் ஆய்வாளர். காளிதாஸ்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.





கருத்துகள்
கருத்துரையிடுக