கடலாடி கல்லூரி அருகே குப்பை எரிப்பு – மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறல்: பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பகுதியில் உள்ள கடலாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு தொடர்ந்து எரிக்கப்படுவதால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கல்லூரி வளாகத்தை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் குவிக்கப்பட்டு தீ வைக்கப்படுவதால், அங்கிருந்து எழும் புகை கல்லூரி வளாகத்திற்குள் பரவி, மாணவர்களுக்கு மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற உடல்நல பிரச்சனைகள் பாதிப்பு ஏற்படுகிறது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சாலையோரத்தில் எரியும் குப்பைகளால் புகை மூட்டம் அதிகரித்து, அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த நிலைமைக்கு உடனடி தீர்வு காணவும், குப்பை எரிப்பை முற்றிலும் தடுக்கவும், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர்களின் உடல்நலம் மற்றும் சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி


கருத்துகள்
கருத்துரையிடுக