தவெக வந்தது வேஸ்ட்: செங்ஸ்-ஐ நம்பினால் அல்வா தான்! குமுறும் ஆதரவாளர்கள்!!
அதிமுகவின் ஒரு முகமாக அறியப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்ஸ், எடப்பாடியுடன் ஏற்பட்ட மோதலில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நீக்கப்படுவோம் என எதிர்பார்த்து காத்திருந்த செங்கோட்டையன், உடனே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதே கையோடு விஜய்யை சந்தித்து தவெகவில் தன்னை இணைத்துக்கொண்டர்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, செங்கோட்டையனின் இடது மற்றும் வலது கரமாக இருந்த அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோரும் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து செங்ஸ் தவெகவில் இணையும்போது, அவர்களும் த.வெ.க.வில் இணைந்தனர்.
அந்த கட்சியில் செங்க்ஸ்-க்கு பொறுப்பு கிடைத்ததுபோல் தங்களுக்கும் மாநில, மாவட்ட அளவில் பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தனர். முன்னாள் எம்.பி., சத்தியபாமாவுக்கு மகளிர் அணியில் மாநில பொறுப்பு கிடைக்கும் என ஆசை.. ஆசை...யாக காத்திருந்தார். ஆனால், சத்தியபாமா உள்பட செங்ஸ் ஆதரவாளர்கள் யாருக்கும் இதுவரை கட்சியில் பொறுப்பு வழங்கப்படவில்லை. இதனால், செங்கோட்டையனின் அடிபொடிகள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர். ‘‘தலைவரையே மதிக்க மாட்றாங்க... நம்மள எப்படி மதிப்பாங்க... செங்ஸை நம்பி வந்ததற்கு நமக்கு பெரிய அல்வா கொடுத்துட்டார்......’’ என ஒருவருக்கொருவர் மனகுமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வெறுப்பு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை, தவெக நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, தங்களை முன்னிலைப்படுத்தி வந்த இவரது ஆதரவாளர்கள், தற்போது செங்கோட்டையன் காருக்கு பின்புறம் ஒதுங்கிக்கொள்கின்றனர். இதனால் கட்சி நிகழ்ச்சிகளை, அனுபவமே இல்லாத தவெகவினரே செய்யவேண்டிய நிலை உருவாகியுள்ளது. வருகிற தேர்தலுக்குள் பொறுப்பு வழங்காவிட்டால், தேர்தல் பணிகளில், நாங்கள் திருப்பி அல்வா கொடுப்போம் என கூறி வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக