டாக்டர். தமிழிசை செளந்தரராஜனின் வேதனை பதிவு!!
அண்ணன் H Raja அவர்கள்.. உடல் நலம் தேறிவருகிறார் என்ற மருத்துவ அறிக்கை எனக்கு ஆறுதலை தருகிறது..
ஆனால் அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் உலா வரும் சில செய்திகள் வியப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறது..
அவர் கலந்து கொண்ட விவாதத்தில் அடுத்த அமர்வு என்னுடையது என்ற வகையில் நான் அங்கிருந்தேன்.. அண்ணன் அவர்கள் கலந்து கொண்ட விவாதம் முடிந்தவுடன் அவர் சற்று சோர்வாக காணப்பட்டார்.
அவரை நெறியாளர் உட்பட பல சூழ்ந்து கொண்டார்கள் ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டு மேடையை நோக்கி உடனே ஓடினேன் பல்சை பார்த்தேன்.
சற்று கவலை அடிக்க கூடியதாக இருந்தது உடனே தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய முதலுதவியை செய்ய ஆரம்பித்து விட்டு அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
பலர் உதவினார்கள் சில பேர் காற்று வீசினார்கள். சில பேர் சர்க்கரை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள்.
சில பேர் தண்ணீர் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி..
சர்க்கரை குறைந்திருக்குமோ என்று நினைத்து சில பேர் அவருக்கு சர்க்கரை கொடுத்தார்கள் ஆனால் நிலைமை அதைவிட தீவிரம் என்பதை உணர்ந்து கொண்டேன்.
என் உடன் நம் செய்தி தொடர்பாளர் தம்பி பிரசாத் அவர்கள் வந்திருந்தார்கள் உடனே வீல் சேர் கொண்டு வரச் சொல்லி அவரோடு அனுப்பிவிட்டு அடுத்த அமர்விற்குப் பின் அவசர அவசரமாக அவர் அனுமதிக்கப்பட்ட.. பாலாஜி மருத்துவமனை நோக்கி சென்றேன்.
அப்பொழுது அங்கே ஸ்கேன் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று ஸ்கேன் பதிவை பார்த்தேன் . கவலை அளிக்க கூடிய சில பிரச்சனைகள் இருந்ததனால் அங்கு உள்ள மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து சில மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு விவாதித்து முடிவெடுத்தோம்..
அப்பொழுது அவர் குடும்ப உறுப்பினரை தொடர்பு கொண்டேன் அவரது தேர்வு அப்போலோ மருத்துவமனையாக இருந்தது...
அவசரமாக அவசர சிகிச்சைக்கு மாற்ற இருந்த வரை மருத்துவ உதவியோடு ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு
ஆம்புலன்ஸிலேயே அத்தனை வசதிகளும் செய்து தம்பி பிரசாத் ஆம்புலன்ஸிலும் நான் பின்னால் சென்று காரிலும் சென்றோம்...
செல்லும் பொழுது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு தயாராக இருக்க வேண்டிய அத்தனை ஏற்பாடும் செய்து கொண்டே தான் சென்றோம்.
அதனால் அங்கு அவர் சென்ற உடனே சிகிச்சை அளிக்க உதவியாக இருந்தது.
மருத்துவர் என்ற முறையில் அங்கே உள்ள மருத்துவர்கள் என்னென்ன அறிகுறிகள் இருந்தது என்று கேட்டார்கள். ஆரம்ப அறிகுறிகளை நான் சொன்னது அவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு பேர் உதவியாக இருந்தது...
அதற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன்..
பின்பு அப்பல்லோவில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது செய்தி அறிந்த உடனே கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகன், மேனன் அரவிந்த் உட்பட எல்லோரும் வந்து அக்கறையோடு விசாரித்து உடன் இருந்தார்கள்.
ரெட்டி சுதாகர் தொலைபேசியில் விசாரித்தார்.. ஆனால் அது பற்றி அவர்கள் பதிவிடவில்லை...
பின்பும் சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து நான் அங்கே வரவேற்பறை யிலேயே அமர்ந்து காத்திருந்து அவர் ஓரளவிற்கு தேறிவருகிறார் வருகிறார் என்று தெரிந்த பின்பு தான் நான் வீட்டிற்க்கே வந்தேன்..
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டு..stroke வந்தால் முதலில் செய்யும் முதல் உதவி தான் மிக மிக முக்கியம் அதற்கு நம்மால் பங்கெடுக்க முடிந்தது என்ற வகையில் இறைவனுக்கு எனது நன்றியை தெரிவித்தேன்..
இது மருத்துவ உதவி என்பதனாலும் அண்ணன் ராஜா அவர்களோடு நெடுநாள் கட்சியில் ஒரு சகோதரியாக பழகிய வகையிலும் இதை பதிவிட வேண்டாம் என்று நினைத்து இருந்தேன்.
முதல் உதவி செய்யும் பொழுது பலர் உடன் இருந்தார்கள் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் சிலர் தாங்கள்தான் அவரது சிகிச்சைக்கு காரணம் என்று பதிவிடுவது மட்டுமல்லாமல் உண்மைக்கு புறம்பாக சில கருத்துக்களை சிலர் குறிப்பாக திமுகவைச் சார்ந்தவர்கள் பதிவிடும் பொழுது மன வேதனை அடைகிறேன்..
அதனாலேயே இதை பதிவிடுகிறேன்!
தயவு செய்து அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் ஒருவரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று மிக மிக தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்..
அதுவும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டிய இந்த நிகழ்வில் திமுக வைச் சார்ந்தவர்கள் மதத்தை புகுத்தி பதிவிடுகிறார்கள் என்பது அதைவிட மிகுந்த வேதனை...
அண்ணன் ராஜா அவர்கள் விரைவில் குணமடைந்து எப்பொழுதும் போல அவரது சுறுசுறுப்பான அரசியலை காண காத்திருக்கிறேன்...
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக