நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா!வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!!
திண்டுக்கல் மாவட்டம்,தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது நத்தம் மாரியம்மன் கோயில். இக்கோயிலின் திருவிழா மாசிப் பெருந் திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இத்திருவிழா வரும் 23-ஆம் தேதி திங்கள் கிழமை காலை 8.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 24-ஆம் தேதி அதிகாலை பக்தர்கள் உலுப்பகுடி அருகேயுள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் சென்று அங்கு புனித நீராடி, தீர்த்தக் குடங்களுடன் சந்தனக் கருப்பு சுவாமி கோயிலில் வந்து ஒன்று சேருவர். அவர்களை அங்கிருந்து காலை 8.45 மணிக்கு மாரியம்மன் கோயிலுக்கு மேளதாளம் முழங்க, வர்ணக்குடை, தீவட்டி பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்துச் செல்வர். பின்னர் பக்தர்கள் அம்மன் உருவம் பொறித்த மஞ்சள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்குவார்கள். அன்றிரவு அம்மன் குளத்திலிருந்து கம்பம் அலங்காரம் செய்து எடுத்து வரப்பட்டு கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்படும்.விழா நாட்களின் இரவில் பிப்ரவரி 27ஆம் தேதி மயில் வாகனத்திலும், மார்ச் 3-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 6-ஆம் தேதி அன்ன வாகனத்திலும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மின்ரதத்தில் நகர்வலம் வரும். அப்போது பக்தர்கள் ஆங்காங்கே திரண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபடுவர். மார்ச் 8ந் தேதி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், 9-ஆம் தேதி அம்மனுக்கு மஞ்சள் திருப்பாவாடை சாட்டுதல் நிகழ்ச்சிகளும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 10-ஆம் தேதி அதிகாலை பக்தர்கள் அக்கினிச் சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், காந்திநகர் பொதுமக்களால் கழுகு மரம் ஊன்றும் நிகழ்ச்சியும் நடைபெறும். பிற்பகலில் காமராஜ் நகர் பொதுமக்களால் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியை தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்டிருக்கும் பூக்குழியில் பக்தர்கள் இறங்குவர். தொடர்ந்து அன்றிரவு கம்பம் கோயிலிலிருந்து எடுத்துச் சென்று அம்மன் குளத்தில் விடப்படும். மறுநாள் 11-ஆம்தேதி காலையில் அம்பாள் மஞ்சள் நீராடுதலைத் தொடர்ந்து மாரியம்மன் அன்றிரவு சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு இரவு முழுவதும் முக்கிய வீதிகளில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்து கோயிலைச் சென்றடைவதுடன் திருவிழா நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், திருக்கோயில் பரம்பரை பூசாரிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக