தை அமாவாசைக்கு வீட்டிலேயே எளிய முறையில் பித்ரு தர்ப்பணம் எப்படி செய்யலாம்?..

 நாளை(18-1-26)
தை அமாவாசைக்கு வீட்டிலேயே எளிய முறையில் பித்ரு தர்ப்பணம் எப்படி செய்யலாம்?

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை 
என்கிறது திருக்குறள்.

ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும். தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகிய ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது.

இந்த ஐவரில் முதலாவதாகத் திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.

மாதம்தோறும் அமாவாசையில் பித்ருக்களை நினைத்துத் தர்ப்பணம் கொடுத்து படையல் இட்டு வணங்குவது மிகவும் சிறப்பானது. 

அவ்வாறு செய்ய இயலாதவர்கள் தவறாமல் ஆடி, புரட்டாசி, தை, மாசி ஆகிய அமாவாசைகளில் பித்ருவழிபாடு செய்வது அவசியம். 

இந்த நான்கு நாள்களிலும் செய்யும் பித்ரு வழிபாடு ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனைக் கொடுக்கும். 

வீட்டிலேயே எளிய முறையில் எப்படி பித்ருக்களுக்கு  தர்ப்பணம் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

வீட்டிலேயே பித்ருக்களுக்கு எள்ளும் நீரும் கொண்டு தர்ப்பணம் கொடுப்பதுடன், காகத்துக்கு எள் கலந்த தயிர் சாதம் கொடுப்பது பித்ருக்களின் பரிபூரண ஆசிகளை நமக்கு பெற்றுத் தரும். 

நதிக்கரையோரம்,கடலோரம் தான் முன்னோர்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று விதி இருந்தாலும் வீட்டிலேயே முன்னோர் தர்ப்பணம் செய்யலாம் என சாஸ்திரங்களில் உள்ளது.

தகுந்த பிராமணர்கள் கிடைக்காத பட்சத்தில் வீட்டில் எளிய முறையில் நாமே நமது முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யலாம்.

நாளை(18-1-26)
ஞாயிற்றுக்கிழமை என்பதால் பகல் 12.00 முதல் 1-30மணி வரையிலான நேரம் எமகண்டமாக உள்ளதால் 
இந்த நேரத்தை தவிர்த்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. 

பொதுவாக தர்ப்பணம் கொடுப்பவர்கள் உச்சி காலத்திற்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து 
விட வேண்டும்.

தை அமாவாசை நாளில் பித்ருக்கள் தர்ப்பணம் கொடுப்பவர்களின்  சந்ததிகளுக்கு நமது முன்னோர்கள் நல்லருள் வழங்கி பிதுர் லோகம் திரும்புவார்கள் என்பது ஐதீகம்.

அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்துச் செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். 

இது ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யலாம். 

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்து விட்டு, சாப்பிடுவது, பசுமாட்டுக்கு கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது உள்ளிட்டவை தர்ப்பணத்தில் அடங்கும்.

வீட்டில் எளிய முறையில் பித்ரு தர்ப்பணம் செய்ய தேவையானவை:

கொஞ்சம் எள்;
ஒன்றிரண்டு 
தர்ப்பை புல்,ஒரே ஒரு ஐந்து முக ருத்ராட்சம்/ஒரு ரூபாய் நாணயம்,ஒரு சிறிய தாம்பாளம்.

தர்ப்பைப் புல்லால் மோதிரம் போலச் செய்து,நமது வலது கையில் இருக்கும் 
மோதிர விரலில் அதை மாட்ட வேண்டும்.

அதாவது,தர்ப்பைப் புல்லினை மோதிரம் போல மோதிர விரலைச் சுற்றி கட்டினால் போதும்.
அல்லது கீழ்கண்ட காணொளிக்காட்சியில் காட்டியுள்ளபடி தர்ப்பை புல்லை மடித்து  கையில் வைத்துக்கொள்ளலாம் 

கீழ்கண்ட காணொளிக்காட்சியில் காட்டியுள்ளபடி,
உள்ளங்கையில்
ஒரு ரூபாய் நாணயம் அல்லது ஒரு ஐந்து முக ருத்ராட்சம்,தர்ப்பை புல்லை மடித்து சிறிதளவு பச்சரிசி ,கொஞ்சம்  எள்சேர்த்து வைத்து கொள்ளவும்.

பிறகு இறந்து போன மூன்று தலைமுறையை சார்ந்த ஒவ்வொரு முன்னோரையும் நினைத்து கொண்டு(கொள்ளு தாத்தா/பாட்டி,தாத்தா/பாட்டி,அப்பா/அம்மா)கீழ்கண்ட மந்திரத்தை  சொல்லிக் கொண்டே ஆள் காட்டி விரலுக்கும்,கட்டைவிரலுக்கும் நடுவே பச்சரிசி மற்றும் எள்ளுடன் சேர்த்து தண்ணீரை விட்டு கீழே உள்ள தாம்பாளத்தில் விழுமாறு செய்ய வேண்டும்.

ஆண் வாரிசு இல்லாமல் இருக்கும் குடும்பங்களில் பெண்கள் கறுப்பு எள்ளுக்குப் பதிலாக,
வெள்ளை எள்ளை வைத்து இதே மந்திரத்தை சொல்லி இதே போல தர்ப்பணம் செய்ய வேண்டும்.

தர்ப்பணம் மந்திரம் சொல்லி தர்ப்பணம் செய்த பிறகு தாம்பாளத்தில் உள்ள
எள் கலந்த தண்ணீரை யார் காலிலும் படாத இடத்தில்,அல்லது ஓடும் நீரில் அல்லது துளசி செடியின் அடியில் விட்டு விட வேண்டும்.

தமிழ் மந்திரம்:

நீத்தார் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர்தாரை எள்ளோடு
நுணல் தருப்பை யாவையுமாய்
மூத்தார் துதிபாடி மூலவரை யாம் பணிவோம்.

இறைவனடி சேர்ந்த 
எனது தந்தை வழி தாய் வழியைச் சேர்ந்த மூன்று தலைமுறை முன்னோர்களே, என் வேண்டுதலை ஏற்று இங்கு வருகை தந்து என்னுடைய இந்த தர்ப்பணத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். 

இந்த சக்தியை பெற்றுக் கொள்ளுங்கள். 

பாவங்கள் நீங்கப்பெற்று, புண்ணியங்களை அதிகரித்துக் கொள்ளுங்கள் . 

அமைதி கொள்ளுங்கள், ஒளி பெறுங்கள், மேலான உலகத்தை அடைந்து திருப்திக்கொள்ளுங்கள். 

உங்களின் பரிபூரண அருளை உங்களின் வாரிசுகளான எங்களுக்கு வழங்குங்கள்.

மேலே கூறப்பட்டிருக்கும் மந்திரத்தை அல்லது அதன் விளக்கத்தை வாய்விட்டு சொல்லி அல்லது மனதிற்குள் ஜபித்தவாறு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

ஒரு முறை மந்திரம் ஜபித்தால் போதுமானது;

இப்படி ஒரே ஒரு முறை செய்யபடும் தர்ப்பணம் பித்ருக்கள் உலகத்தில் வாழும் நமது முன்னோர்களுக்கு ஒரு வருடத்திற்கான உணவாகவும்,
குடிநீராகவும் போய்ச் சேருகின்றது.

பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற அபரான்ன காலம்.

சூர்யோதயத்திலிருந்து சூர்யாஸ்தமனம் வரையுள்ள பன்னிரண்டு மணியை ஒவ்வொன்றும் ஆறு நாழிகை கொண்ட ஐந்து பாகங்களாகவும் பஞ்சாங்கம் பிரித்திருக்கிறது.

இதன்படி காலை ஆறு மணிக்கு சூர்யோதயம் என்றால் காலை 8.24 வரை பிராதஃகாலம். 

காலை8.24லிருந்து காலை10.48 வரை ஸங்கவ காலம்.

காலை10.48லிருந்து பகல் 1.12 வரை மாத்யான்னிக காலம் (மத்தியான்னம் என்பது) 

பகல்1.12லிருந்து 3.36வரை அபரான்ன காலம்.

பகல்3.36லிருந்து 6 மணி வரை (அதாவது சூர்ய அஸ்தமனம் வரை) ஸாயங்காலம்.

பித்ரு தர்ப்பணத்தை அபரான்ன காலத்தில் செய்தால் மட்டுமே அது பித்ருக்களை சென்றடையும் என சேலம் ஸ்ரீனிவாசனின் பஞ்சாங்க கர்த்தா திரு நர.நாராயணன் அவர்கள் எழுதிய பஞ்சாங்க ரகசியங்கள் என்ற நூலில் கூறியுள்ள்ளார். 

அபரான்ன காலம் என்பது மதியம் 1-12 மணி முதல் 3-36 மணிவரை உள்ள காலமாகும்.

அபரான்ன காலத்தில் 
பூமி வெப்பத்தால் தகிக்கும்.

நம்மால் வெறும் காலால் பூமியின் வெப்பத்தை தகிக்க முடியவில்லை எனில் அதுவே பித்ரு தர்ப்பணம் செய்வதற்கு தகுந்த நேரம்.

இதுவே பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற விஷேசமான காலம்.

இந்த நேரத்தில் தர்ப்பணம் செய்தால் பித்ருக்கள் மிக்க சந்தோசமடைவார்கள்.

நாளை தை அமாவாசை 18-1-26 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1-20 முதல் மறுநாள்19-1-26 அதிகாலை 2-31 வரை 
அமாவாசை திதி உள்ளது

நாளை(18-1-26) மதியம் 1-30 எமகண்டம் முடிந்த பிறகு மதியம் 1-31மணி முதல் 3-36 மணிவரை உள்ள அபரான்ன காலத்தில் தர்ப்பணம் செய்தால் பித்ருக்கள் மிக்க சந்தோசமடைவார்கள்

தர்ப்பணம் செய்யும் நாட்களில் வீட்டிலே வெளியிலே உடல் உறவு சம்பந்தபட்ட (ரொமான்ஸ்) நடவடிக்கைகளில் கண்டிப்பாக ஈடுபடக் கூடாது.இது மாபெரும் தவறு.

மிகுந்த புண்ணியம் உள்ளவர்கள் இம்மாதிரியான தர்ப்பணம் செய்யும் போது தமது முன்னோர்களை நேரில் ஓளிவடிவுடன் தரிசிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்.

கீழ்கண்ட காணொளிக்காட்சியினை 👇👇பார்த்து அதில் சொல்லபடுகின்ற முறையினை பின்பற்றி எளிய முறையில் உங்களது வீட்டிலேயே பித்ரு தர்ப்பணத்தை செய்து உங்களது முன்னோர்களாகிய பித்ருக்களின்ஆசீர்வாதத்தை பெற்று கொள்ளுங்கள்.

நன்றி:ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் அகஸ்திய விஜயம்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!