மணல் குவாரிக்கு எதிர்ப்பு: பாமக மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் – தற்காலிகமாக பணிகள் நிறுத்தம்!!
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள சக்கர மல்லூர் கிராமத்தில் அரசு அனுமதியுடன் மணல் குவாரி தொடங்குவதற்கான ஒத்திகை பணிகள் இன்று காலை நடைபெற்றன. இதனை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக வந்து, மணல் அள்ள வந்த டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் குவாரி அமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர்மட்டம் குறைவு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும் எனக் கூறி போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆற்காடு கிராமிய காவல்துறையினர், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மாவட்ட ஆட்சியரை நேரில் அணுகி மனு அளிக்குமாறு அறிவுறுத்திய காவல்துறையினர், அதுவரை தற்காலிகமாக மணல் எடுக்கும் பணிகள் நிறுத்தப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியலை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் சக்கர மல்லூர் கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக