கோவையில் சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு - துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று நடைபெற்ற முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360 (International Textile Summit 360) நிகழ்வில், தமிழக துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜவுளித் துறையின் வளர்ச்சிக்காக ரூ.1,100 கோடிக்கும் அதிகமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழகத்தில் ஜவுளி ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ஏற்றுமதியாளர் விருதுகள் வழங்கப்பட்டன. சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என 5 பிரிவுகளில் முதலிடம் பெற்ற 5 நிறுவனங்களுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், 10 நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்த வங்கிக் கடன்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு நூற்பாலைக்கு ரூ.11.70 லட்சம் வட்டி மானியத்திற்கான ஆணை வழங்கப்பட்டது. அதேபோல், சாதாரண விசைத்தறிகளை நவீன ரேப்பியர் தறிகளாக மாற்றவும், புதிய தறிகள் வாங்கவும் 12 விசைத்தறியாளர்களுக்கு மொத்தம் ரூ.67.49 லட்சம் மானியமாக வழங்கப்பட்டது.
துணி நூல் பதனிடும் பிரிவில் புதிய ஆலைகள் தொடங்கவும், விரிவாக்கம் செய்யவும் முன்வந்த 3 நிறுவனங்களுக்கு ரூ.1,092 கோடி மதிப்பிலான மூலதன முதலீட்டு மானியத்திற்கு அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் ஆணை வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜவுளித் துறையில் பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், அகலமான துணி அச்சிடும் இயந்திரங்கள் வாங்கிய 2 நிறுவனங்களுக்கு ரூ.38.35 லட்சம் மானியம், ஆயத்த ஆடை பிரிவில் தானியங்கி துணி வெட்டும் இயந்திரம் வாங்கிய 3 நிறுவனங்களுக்கு ரூ.142.94 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. பல்லவாடா தொழில்நுட்ப ஜவுளிப் பூங்காவிற்கு மாநில அரசின் பங்காக ரூ.1.30 கோடி மானியமும், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் 6 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ரூ.138.32 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டின் மூலம் கோவையின் ஜவுளித் தொழில் உலகத் தரத்திற்கு உயரும் என்றும், குறிப்பாக செயற்கை இழைகள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழும் என்றும் துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக ஜவுளி துறை அரங்குகளை துணை முதலமைச்சர் பார்வையிட்டார்.தொடர்ந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியையும் அவர் கண்டு ரசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஜவுளித் துறை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
கோவை செய்தியாளர் பட்டுராஜ்.








கருத்துகள்
கருத்துரையிடுக