கிணற்றில் தவறி விழுந்த 16 வயது சிறுவன் உயிரிழப்பு – பொங்கல் பண்டிகையில் குடும்பத்தை உலுக்கிய சோகம்!!
சென்னை, கொளத்தூர், பொன்னியம்மன்மேடு தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ரோகித் (வயது 16) மற்றும் ஜெகன் (வயது 15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, லட்சுமியின் அக்கா வீட்டிற்கு, வாழைப்பந்தல் அடுத்த மேல்புதுப்பாக்கம் கிராமத்திற்கு குடும்பத்தினர் வந்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று நண்பகல் சுமார் 12 மணி அளவில் லட்சுமி, அவரது அக்காவின் மகன் ஸ்ரீராம், பார்த்தசாரதியின் மகன்கள் ரோகித் மற்றும் ஜெகன் ஆகியோர் வயலுக்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது அருகில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக ரோகித் இறங்கியுள்ளார். கிணற்றின் படிக்கட்டில் கால் தவறியதால், அவர் தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளார். இதைக் கண்ட ஸ்ரீராம், உடனடியாக ஊருக்குள் சென்று உதவி கேட்டு ஆட்களை அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர்கள் திரும்பி வருவதற்குள், ரோகித் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஊரில் உள்ள பெரியவர்கள் கிணற்றில் தேடியும் சிறுவன் கிடைக்காததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 1 மணி 30 நிமிடம் தேடுதல் பணியில் ஈடுபட்டு, கிணற்றில் மூழ்கிய நிலையில் ரோகித்தின் உடலை மீட்டனர்.
மேலும், வாழைப்பந்தல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ரோகித்தின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த துயர சம்பவம், பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் இருந்த அந்த குடும்பத்தையும், கிராம மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக