பெண்ணாடம் அருகே பள்ளி வாகனம் மோதி தந்தை, மகன் பலி! மதுபோதையில் வாகனத்தை ஓட்டிய டிரைவர் கைது!!
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே பள்ளி வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். பெண்ணாடம் - கோனூர் கிராம சாலையில் திருமலை அகரம் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று காலை 8 மணி அளவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது. பெண்ணாடம் சோழன் நகரைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் வேல் (38) என்பவர், ஜெயசக்தி மழலையர் பள்ளிக்குச் சொந்தமான பள்ளி வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பள்ளி வாகனம் அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த திருமலை அகரத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மதியழகன் (45) மற்றும் அவரது மகன் மனோஜ் (25) ஆகிய இருவருக்கும் தலை மற்றும் உடல் பாகங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், மதியழகன் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பள்ளி வாகனத்தை ஓட்டி வந்த வேல் மதுபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக