மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது!!
தூத்துக்குடி மாவட்டம்,புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஆசிரியரை மதுரையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தியாகராஜன் என்ற ஹென்றி (41). இவர் அப்பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கடந்த மாதம் 16-ந் தேதி விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசார், ஆசிரியர் ஹென்றி மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்து வந்ததால், அவரை பிடிக்க விளாத்திகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு அசோகன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர் மதுரையில் பதுங்கி இருப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அவரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
ஒரு மாதமாக தலைமறைவாக இருந்த அவர் தனிப்படையினரிடம் சிக்கினார். அவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசாரிடம் தனிப்படையினர் ஒப்படைத்தனர். அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக