மௌண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா!!
மௌண்ட் சீயோன் சர்வதேச பள்ளியில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மையக்கருத்தாக கொண்டு கிறிஸ்துமஸ் விழாவானது கொண்டாடப்பட்டது. விழாவிற்கு புதுக்கோட்டை டி.இ.எல்.சி பள்ளியின் தாளாளர். சுரேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளியின் இணை நிறுவனர். ப்ளாரன்ஸ் ஜெயபரதன், பள்ளியின் தலைவர். டாக்டர் ஜோனத்தன் ஜெயபரதன், இணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், பள்ளியின் முதல்வர் டாக்டர் ஜலஜா குமாரி ஆகியோர் தலைமையில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஒன்று கூட விழா ஆரம்பமானது. பள்ளியின் தலைவர் சிறப்பு விருந்தினரை வரவேற்று வரவேற்புரை வழங்கி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். இணை நிறுவனர் அவர்கள் கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய கருத்தான அமைதி எல்லோர் வாழ்விலும் மேலோங்கி இருக்க வேண்டும் என்பதை மையக்கருத்தாக கொண்டு சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் அவர்கள் பிறப்பின் முக்கியத்துவம் குறித்தும் அனைவரிடமும் அன்பையும் கருணையும் வெளிப்படுத்துவதன் அவசியம் குறித்தும் குழந்தைகளின் உள்ளத்தில் தான் கிறிஸ்துவின் பிறப்பின் உண்மையான அர்த்தம் வெளிப்படுகிறது என்றும் விவிலிய வசனங்களை எடுத்துக் கூறி சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து கிறிஸ்து பிறப்பு காட்சி மாணவர்களின் தத்துரூபமான குடில் நாடகம், ஏசு பிறப்பின் மகிமையை சித்தரிக்கும் விதமாக நடந்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. பள்ளி பாடகர் குழுவினர் பாரம்பரிய கரோல் பாடல்களை இனிமையாக பாடினர். கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகையும் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வந்தது. பள்ளியின் தலைவர் மற்றும் குழுவினர் பள்ளியின் நடத்துநர்கள், பள்ளியின் ஆசிரியர்கள் ஆகியோரும் கிறிஸ்து பிறப்பு குறித்த சிறப்பு பாடல்களை பாடி அனைவருக்கும் வாழ்த்தை தெரிவித்தனர். இறுதியில் பள்ளியின் முதல்வர் அனைவருக்கும் நன்றியுரை கூற வானுலக தேவதூதர்கள் போல் மழலையர் முதல் அனைவரும் நடனமாட விழா நிறைவுற்றது.
புதுக்கோட்டை செய்தியாளர். அசோக்


கருத்துகள்
கருத்துரையிடுக