சோளிங்கரில் கல்லூரி பேருந்து விபத்து: 70 வயது ஓட்டுநர் ரவி உயிரிழப்பு – அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய மாணவிகள்!!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே இன்று காலை நிகழ்ந்த விபத்தில், ஆற்காடு மகாலட்சுமி பெண்கள் கல்லூரி பேருந்து ஓட்டுநர் ரவி (70) தன்னுடைய உயிரையே பணயம் வைத்து மாணவிகளின் உயிரைக் காத்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு, சத்யா நகர், தாஜ்புரா, ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பலராமன் மகன் ரவி (வயது 70) ஆற்காடு மகாலட்சுமி பெண்கள் கல்லூரியில் நீண்ட காலமாக ஓட்டுநராக பணி செய்து வந்தார். இந்தக் கல்லூரிக்கு ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தினமும் பேருந்துகளில் படிக்க வருகிறார்கள். இன்று காலை ரவி ஓட்டிச் சென்ற டிஎன் 73/AA 6141 என்ற கல்லூரி பேருந்து, திருத்தணி – கேஜி கண்டிகை – ஆர்.கே.பேட்டை – சோளிங்கர் வழியாக மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆற்காடு நோக்கி வந்தது.
ஜம்புகுளம் கூட்ரோடு அருகே, அரசு கலைக் கல்லூரி எதிரே சென்றபோது, ரவிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. அவர் மாணவிகளை சத்தமாக அழைத்து எச்சரிக்கவும் முயன்றதாக தெரிகிறது. மாணவிகள் பீதியடைந்து கத்தி அலறியபோது, பேருந்து சற்றே கட்டுப்பாட்டை இழந்து திடீரென தடுமாறத் தொடங்கியது. பேருந்து வீதி விட்டு கீழிறங்கக் கூடும் அபாயத்தில் இருந்தபோதும், ஓட்டுநர் ரவி தன்னுடைய கடைசி உயிர்ச்சுவாசம் வரை வாகனத்தைக் கட்டுப்படுத்த போராடினார்.
இறுதியில் மாணவிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில், அருகிலிருந்த புளியமரத்தில் மோதி பேருந்தை நிறுத்தினார். இந்த கடைசி முயற்சிக்குப் பிறகு, அவர் ஸ்டியரிங் மீது சாய்ந்து உயிரிழந்தார். மாணவிகள் அலறிய சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, பேருந்தில் இருந்த ரவியை கீழிறக்கி சோளிங்கர் காவல்துறைக்கு தகவல் வழங்கினர்.
டிஎஸ்பி வெங்கடகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் உடலை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு உடற்பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பேருந்தில் இருந்த மாணவிகள் சிறு காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். மாணவிகள் இன்று முக்கியமான தேர்வுக்காக கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்ததால், விபத்துக்குப் பிறகு அவர்கள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சாலையோரத்தில் வாகனமின்றி தவித்ததாக மாணவிகள் தெரிவித்துள்ளார். அப்பகுதி மக்கள் மற்றும் மாணவிகள் பலமுறை கல்லூரிக்கு போன் செய்தும், உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இரண்டு மணி நேரம் கழித்து மட்டுமே மற்றொரு பேருந்து வந்து மாணவிகளை அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
மாணவிகளின் உயிரைக் காக்க தன்னையே அர்ப்பணித்த ஓட்டுநர் ரவியின் வீரத்தன்மைக்கு பொதுமக்கள், மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் உணர்ச்சி பூர்வமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் சோளிங்கர் – ஆற்காடு சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்






கருத்துகள்
கருத்துரையிடுக