ஆதரவற்ற மாற்றுத்திறனாளி முதியவர் முதியோர் இல்லத்தில் ஒப்படைப்பு! அதிகரிக்கும் ஆதரவற்றோர்கள் தேய்கிறதா மனித நேயம்?.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா க.விலக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பேருந்து நிறுத்தத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒரு கால் செயலிழந்து ஆதரவற்ற நிலையில் இருந்தார். இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலில் க.விலக்கு காவல் துறையினர் உதவியுடன் ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார் முதியவரை மீட்டார். அவரை சுத்தம் செய்து திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில் உள்ள சென் ஜோசப் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். சமீப காலமாக தேனி மாவட்டத்தில் இது போன்று ஆதரவற்ற நிலையில் அடிக்கடி சுற்றித் திரியும் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளை மீட்டு காப்பகத்தில் சேர்ப்பது தொடர்கிறது. தேனி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளை யாரேனும் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார்களா அல்லது வழிதவறி இப்பகுதிக்கு வருகின்றனரா என்று தெரியவில்லை. ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து மனித நேயம் காக்கவும் அவர்களின் உறவினர்கள், தனி நபர்கள், தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக