மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற இருந்த போராட்டம் ரத்து!!
திண்டுக்கல் மாவட்டம்,சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டியில் நெடுஞ்சாலையில் தடுப்புச் சுவர்களால் தொடரும் விபத்துகளை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வியாழக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் பேச்சு வார்த்தை பின் கைவிடப்பட்டது.
திண்டுக்கல் - நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கோபால்பட்டி, பங்களா எர்ரமநாயக்கன்பட்டி, குட்டூர் உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள (சென்டர் மீடியன்) சாலை மைய தடுப்புச் சுவர்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தடுப்புச் சுவர்களை அகற்ற வேண்டுமெனிலோ அல்லது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் பலமுறை கோரிக்கை விடுத்தும் நெடுஞ்சாலைத் துறையினர் செவிசாய்க்கவில்லை.
இந்நிலையில், சாணார்பட்டி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை (நவ.13) கோபால்பட்டியில் உள்ள தடுப்புச் சுவர் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தைத் தவிர்க்கும் விதமாக வியாழக்கிழமை காலை சாணார்பட்டி காவல் நிலையத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
கட்சியின் சாணார்பட்டி ஒன்றியச் செயலர் வெள்ளைகண்ணன், நிர்வாகிகள் முத்துச்சாமி, பெருமாள் உள்ளிட்டோரும், நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர்கள் சண்முகம், ராம்குமார் உள்ளிட்டோரும், சாணார்பட்டி காவல் ஆய்வாளர் பிரபாகரன், காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில், வரும் 15 நாட்களுக்குள் திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள அனைத்து தடுப்புச் சுவர்களுக்கும் முன்புறமும் பின்புறமும் ஒளிரும் ரிஃப்ளெக்டிவ் ஸ்டிக்கர்கள், சோலார் பிளிங்கர் விளக்குகள், வேகத் தடைகள், எச்சரிக்கை பலகைகள், உயரமான கோபுர விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து வியாழக்கிழமை நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இதன் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 நாட்களுக்குள் சரி செய்யப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக