தேங்காய் திருடிய இருவர் கைது! தைரியமாக மடக்கிப்பிடித்த பெண்!!
திண்டுக்கல் மாவட்டம்,சாணார்பட்டி அருகேயுள்ள நத்தமாடிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் - மலர்கொடி (47) தம்பதியினருக்கு ராகலாபுரம் சாலையில் ஆலங்குளம் அருகே தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோப்பில் திங்கட்கிழமை இரவு மர்ம நபர்கள் சிலர் தேங்காய் திருடிக் கொண்டிருந்தனர்.
இதை அறிந்த மலர்கொடி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக தோப்புக்கு சென்று திருட்டில் ஈடுபட்ட இருவரை மடக்கிப்பிடித்தார். பின்னர் அவர்களை சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர். பிரபாகரன், உதவி ஆய்வாளர் வேலுச்சாமி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் பெத்தாம்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் (43), ராமன் செட்டியபட்டியைச் சேர்ந்த கார்த்திக் (26) எனத் தெரியவந்தது.
இருவரும் தேங்காய் திருடியது உறுதியானதைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தைரியமாக செயல்பட்டு திருடர்களைப் பிடித்து ஒப்படைத்த மலர்கொடிக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.
கருத்துகள்
கருத்துரையிடுக