திமிரிக்கோட்டையில் ஐயப்பசாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், திமிரிக்கோட்டையில் எழுந்தருளி இருக்கும் அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பசாமி திருக்கோவிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா மகத்தான முறையில் நடைபெற்றது.
திமிரி ஐயப்ப பக்தர்கள் குழுவினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பாலமுருகன் அடி சுவாமிகள், சச்சிதானந்தா சுவாமிகள், மோகானந்தா சுவாமிகள் உள்ளிட்ட பல சந்நிதான சுவாமிகள் பங்கேற்று தலைமை தாங்கினர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்வில் மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை, மகா பூரணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. பின்னர் காலை 9.45 மணிக்கு கலசங்கள் புறப்பட்டு, 10 மணிக்கு கோபுர விமான கும்பாபிஷேகம், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ விநாயகர், நாகதேவர், மந்தா மாதா, ஸ்ரீ முருகர், மற்றும் ஸ்ரீ ஐயப்பசாமி கும்பாபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றன.
பின்னர் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், நேற்று திங்கட்கிழமை இரவு பஜனை பாடல்களுடன் ஸ்ரீ ஐயப்பசாமி திருவீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்


கருத்துகள்
கருத்துரையிடுக