நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.4.92 கோடி மதிப்பீட்டில், பழங்குடியின மக்களுக்கு 97 வீடுகள் ஒதுக்கீடு - முடிவுற்ற வீடுகளை, ஒன்றிய குழு தலைவர் பயனாளிகளிடம் ஒப்படைத்தார்!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சித்தூர், அரிகிலபாடி, சித்தேரி, காட்டுப்பாக்கம், கீழ்வெங்கடாபுரம், மேல்களத்தூர், நெல்வாய், ஓச்சலம், பரமேஸ்வரமங்கலம், பருத்திபுத்தூர், பின்னாவரம், சிறுணமல்லி, உளியநல்லூர் ஆகிய 13 ஊராட்சிகளில் PM-JANMAN திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் நிதியாண்டிற்கு 22 வீடுகளும், 2024-25 ஆம் நிதியாண்டிற்கு 75 வீடுகளும், ஆக மொத்தம் 97 வீடுகள் பழங்குடியின மக்களுக்கு கட்டி முடிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்வொரு வீடும் ரூ. 5 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில், மொத்தம் 97 வீடுகள் ரூபாய் 4 கோடி 92 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடுகள் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு, “பிர்சா முண்டா மற்றும் பழங்குடியின வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் விதமாக” 15.11.2025 சனிக்கிழமை நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேற்கண்ட 13 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டங்களில் *பிர்சா முண்டா மற்றும் பழங்குடியின வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து, “ஜன்ஜாதியா கௌரவ் திவாஸ்” தினத்தை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட அறிவுறுத்தப்பட்டது.* இந்த கிராம சபைக் கூட்டங்களில் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை, பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனடிப்படையில் சித்தூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெமிலி ஒன்றிய குழு தலைவர்.பெ. வடிவேலு அவர்கள், முடிவுற்ற வீடுகளுக்கான சாவியை பயனாளிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சிவக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சேகர், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், கலைச்செல்வி பாபு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் கன்னியப்பன், தூய்மை காவலர்கள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக