கடலூர்: கன மழையின் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!!
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருவதால் _பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க_ வேண்டும், மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் அறிவுறித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை-2025 காரணமாக, பரவலாக மழை பெய்து வருவதால், நீர் நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொதுமக்கள், கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மாவட்டத்தில் கனமழை காலங்களில், பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி மின்னலுடன் கனமழை பெய்து வரும்போது, திறந்த வெளியில் நிற்பதையும், நீர்நிலைகளில் குளிப்பதையும், மரங்கள் மற்றும் உலோக கட்டமைப்புகளின்கீழ் நிற்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மழை / வெள்ளநீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டிவைக்க கூடாது. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
வெள்ளப் பெருக்கு ஏற்படும் சமயங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களது ஆதார் / குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும்.
பேரிடர் காலங்களில், பொதுமக்கள் டார்ச்லைட், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வைத்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பேரிடர் கால நடவடிக்கைகள் மேற்கொள்ள, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் 1077 என்ற கட்டணமில்லா
தொலைபேசி எண் மற்றும்
04142 – 220 700,
04142 – 290 325,
04142 – 290 326,
04142 – 290 327
ஆகிய தொலைபேசி எண்கள் செயல்பட்டு வருகிறது, மேற்படி தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு,மழை, வெள்ளம் மற்றும் பேரிடர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். பெறப்படும் புகார்கள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கட்டுப்பாட்டு அறையில் சுழற்சி முறையில் பணிபுரியும் அலுவலர்கள் மூலம் புகார்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு நேரடியாக தெரிவிக்கப்பட்டு,உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட ஆட்சித்தலைவர். சிபி ஆதித்யா செந்தில்குமார் IAS அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக