வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு!
தமிழக வீரம் பற்றிப் பேசினால், உடனே நினைவுக்கு வருபவர், வீரபாண்டிய கட்டபொம்மன். ‘வீரபாண்டியன்’ என்றும், ‘கட்டபொம்மன்’ என்றும், ‘கட்டபொம்ம நாயக்கர்’ என்றும் அழைக்கப்பட்ட இவர், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே, தமிழக மண்ணில் ஆங்கிலேயர்களைத் துணிச்சலாக எதிர்த்தவர். இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சித் தலைமை உரிமையை ஏற்க மறுத்து, தனது இறுதி மூச்சு உள்ளவரை, ஆங்கிலேயர்களை அசாதாரண தைரியத்தோடு, வீறு கொண்டு எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீர வாழ்க்கை வரலாறு சாதனைகளை காண்போம்.
தோற்றம்;
ஆதிகட்டபொம்மன் வம்சாவழியில் வந்தவர்களே ஜெகவீர கட்டபொம்மன் மற்றும் ஆறுமகத்தம்மாள் தம்பதியருக்கு 1760 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மகனாக வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தார். இவரது இயற்பெயர் ‘வீரபாண்டியன்’ என்பதாகும். கட்டபொம்மன் என்பது இவரது வம்சாவழியைக் குறிக்கும் அடைமொழியாகும்.
இளமைக்காலம்;
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், ஐந்து குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தார். அவருக்கு ஊமைத்துரை என்ற குமாரசாமி, துரைச்சிங்கம் என்ற இரு சகோதரர்களும், ஈசுவர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு சகோதரிகளும் உடன்பிறந்தோர் . பின்னர், கட்டபொம்மன் வீரஜக்கம்மாள் என்பவரை மணந்தார். அவருக்கு முப்பது வயதாகும் வரை, அவரது தந்தை ஜெகவீர கட்டபொம்மன் பாளையக்காரராக இருந்து வந்ததால், தந்தைக்கு உதவியாக இருந்தார், கட்டபொம்மன். பின்னர், பிப்ரவரி 2 ஆம் தேதி, 1790ம் ஆண்டில், 47 வது பாளையக்காரராக அரியணைப் பொறுப்பை ஏற்றார்.
ஆங்கிலேயர்களுடன் மோதல்;
வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் அரியணை பொறுப்பை ஏற்ற சமயத்தில், ஆங்கிலேயர்கள் இங்கிலாந்தின் கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் தொடங்கியது. அக்கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலியிலும் உருவானது. எட்டயபுரம் ராஜாவிடம் இருந்து பாளையத்தில் வரிவசூல் செய்யும் உரிமையை பெற்றனர் ஆகிலேயர்கள். இதனால், திருநெல்வேலியை சுற்றியுள்ள அனைத்து பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், அதற்காக ஆங்கிலேய நிர்வாகிகளாகக் கலெக்டர்களை நியமித்தனர். இதற்கு பெரும்பாலானப் பாளையக்காரர்கள் ஒத்து வராமல், எதிர்த்து நின்றனர், அவர்களை ஒழிக்க எண்ணிய ஆங்கிலேயர்கள், பாளையக்காரர்களில் ஒருவருக்கொருவர் எதிரிகளாக்கும் வகையில் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்களுக்கு பயந்த சிலர், அவர்களுக்கு வரி செலுத்தியதால், அவர்களுக்குப் பல சலுகைகள் தரப்பட்டது. எதிர்த்தவர்களுக்கு அதிக வரி விதித்தத்தோடு கடுமையான, தண்டனையும் வழங்கினர்.
பாஞ்சாலங்குறிச்சிக்கு வருவாய் அளித்து வந்த வளமான பகுதிகளான திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் வந்ததால், கட்டபொம்மனால் வரி செலுத்த முடியவில்லை. கப்பம் கட்ட போதிய பணம் இல்லாததால், திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி, மக்களிடமிருந்து வரி வசூல் செய்தார், கட்டபொம்மன். இதனைப் பல மக்களும், பகல் கொள்ளை என்று குற்றம் சாட்டி, கட்டபொம்மனை ‘கொள்ளையர்’ என்றெல்லாம் சாடினர். அப்போது, திருநெல்வேலிப் பகுதியின் கலெக்டராக இருந்த ஜாக்சன் துறை என்பவர் கட்டபொம்மனிடம் வரி கேட்க நேரில் சென்ற போது, கோபமடைந்த கட்டபொம்மன் அவர்கள்,
“நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா? “வரி, வட்டி, திறை, கிஸ்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் பணிபுரிந்தாயா? மாமனா? அல்லது மச்சானா? மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி”. என்று பேசிய வீர வசனம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
தேனி செய்தியாளர் சின்னதம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக