சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோவில் சுற்றுச்சுவர் இடிந்தது: ₹1.25 கோடி வீண்? - ஊழல் குற்றச்சாட்டு!!



ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் கோயிலின் சுமார் 15 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக இடிந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ₹1.25 கோடி செலவில் சீரமைப்புப் பணிகள் நடந்து, குடமுழுக்கு நடந்து சில மாதங்களே ஆன நிலையில் இந்தச் சுவரின் சரிவு, கோயில் மறுசீரமைப்புப் பணிகளில் ஊழல் மற்றும் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளது.

கோடிக்கணக்கில் செலவு; தரமில்லை? - மக்கள் கொந்தளிப்பு!ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயத்தின் அருகில், 400 படிக்கட்டுகளுடன் மலையில் அமைந்துள்ள யோக ஆஞ்சநேயர் கோயிலில், இந்து அறநிலையத்துறை சார்பில் சுமார் ₹1.25 கோடி ஒதுக்கப்பட்டதாகவும், பணிகள் நிறைவடைந்து 07.07.2025 அன்று குடமுழுக்கு நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டுகள்:

 "₹1.25 கோடி செலவில் தரமான மறுசீரமைப்புப் பணிகள் நடந்திருந்தால், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்திருக்க வாய்ப்பே இல்லை. இது பராமரிப்புப் பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்பதையே காட்டுகிறது."

"இந்த விவகாரத்தில் பெரிய அளவில் லஞ்சமும், ஊழலும் நடந்திருக்கிறது. சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் தொகுதி எம்எல்ஏ அமைச்சர் உட்பட யாருமே பொறுப்பேற்கவில்லை."

 

 "மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்க உடந்தையாக இருந்ததன் விளைவே இந்த விபத்து. சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு உடனடியாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வலுவாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பா.ஜ.க. குற்றச்சாட்டு:

இது குறித்துப் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலப் பொறுப்பாளர் சீனிவாசன், "சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட கோயில், சுற்றுச்சுவரைக்கூட சரிவரப் பராமரிக்காமல் விட்டது ஏன்? ஒரு கோடி ரூபாய்க்கு அப்படி என்னதான் செலவு செய்தீர்கள் என்ற சந்தேகம் எழுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்," என்று வலியுறுத்தினார். மேலும், கல்குவாரியில் வெடி வைத்ததால் இடிந்து விழுந்ததாக அறநிலையத் துறை அதிகாரிகள் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்றும்அவர்தெரிவித்தார்.'வெடிகளினால் பாறைகள் தகர்ப்பு' தான் காரணம்: இந்து அறநிலையத்துறை அதிகாரி விளக்கம்.

ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், சோளிங்கர் யோக ஆஞ்சநேயர் கோயிலின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது குறித்து, இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் (அசிஸ்டன்ட் கமிஷனர்) ராஜா தொலைபேசியில் அளித்த விளக்கம் வருமாறு:

கல்குவாரி வெடி அதிர்வுகளே மூல காரணம்:

"கோயிலைச் சுற்றிலும் உள்ள மலையில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் வைக்கப்படும் மிகப்பெரிய வெடிகளினால் பாறைகள் தகர்க்கப்படுகின்றன. இந்த வெடி அதிர்வுகளின் தொடர்ச்சியான தாக்கம் காரணமாகவே சுற்றுச்சுவர் பலவீனமடைந்தது. தற்போது பெய்து வரும் கனமழையும் சேர்ந்ததால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது," என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கை மனு:

"இது குறித்து நாங்கள் கடந்த பத்தாம் தேதியே மாவட்ட ஆட்சியரிடம் முன்னெச்சரிக்கை மனு அளித்துள்ளோம். கோயிலுக்கு மிக அருகில் கல்குவாரிகள் செயல்படுவதால், அங்கு வைக்கப்படும் வெடிகளினால் கோயில் பாதிக்கப்படுகிறது. எனவே, அந்தக் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று நாங்கள் மனுவில் வலியுறுத்தி இருந்தோம்," என்றும் ராஜா கூறினார்.

புனரமைப்பு பணி மற்றும் நிதி ஒதுக்கீடு:

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு (2022-இல்) தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டில், யோகா ஆஞ்சநேயர் கோயிலுக்கு ₹90 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டது."

  "ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சபரி என்பவர் கோயில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டார்."

 "புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகமும் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது."

ட்ரில்லிங்கினால் பாதிப்பில்லை:

சுற்றுச்சுவர் சீரமைப்புப் பணியின்போது ட்ரில் (துளையிடும் கருவி) பயன்படுத்தியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "நாங்கள் சுற்றுச்சுவரில் ஒரு ஸ்டீல் கம்பி போடுவதற்காக லேசாகத்தான் ட்ரில் போட்டோம். இந்த ட்ரில் போட்டதால் சுற்றுச்சுவர் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை. பக்கத்தில் உள்ள கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் ஏற்பட்ட அதிர்வுகளால்தான் சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டது," என்றும் உதவி ஆணையர் ராஜா விளக்கம் அளித்தார்.

ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!