ஆற்காடு அடுத்த வேப்பூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதி!!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த வேப்பூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் ஆதிதிராவிட மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வடிகால் வசதி, சாலை வசதி, மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்கள் போன்ற பல பிரச்சனைகளால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியான பஜனை கோவில் தெருவில் சரியான வடிகால் வசதி இல்லாததால், தற்போது பெய்து வரும் கனமழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
மேலும் நடுத் தெருவிலுள்ள இரண்டு மின்கம்பங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் நிற்கின்றன. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின் கசிவால் விபத்து ஏற்படலாம் என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அப்பகுதியில் உள்ள பஜனை கோவிலைச் சுற்றிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படாததால், மழைநீர் தேங்கி பொதுமக்கள் நடமாடுவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. தெரு முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளதால் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் மற்றும் துணைத் தலைவர். ரஞ்சித்குமார் ஆகியோரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் இல்லாததால் அன்றாட வாழ்க்கைக்கே சிரமப்படும் நிலை உள்ளதாகவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்.





கருத்துகள்
கருத்துரையிடுக