நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட, ரூ.20 இலட்சம் மதிப்புள்ள, 8 சென்ட் நிலம் அரசுக்கு தானமாக வழங்கியவருக்கு அமைச்சர் பாராட்டு!!!
இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாகி, மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தரப்பட வேண்டும் என்று, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை அடுத்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். இதனை அடுத்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர். சந்திரகலா IAS ஆகியோர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கு நெமிலி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட விஜயபுரம் பகுதியில் அடிக்கல் நாட்டினர்.
இந்நிலையில், இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட, ஏற்கனவே உள்ள அரசு நிலம் போதுமானதாக இல்லை. எனவே அருகில் உள்ள தனியார் இடத்தில் 8 சென்ட் அளவு இடம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். எனவே நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் அவர்கள் அருகில் உள்ள நிலத்தின் உரிமையாளர். பாபு என்பவரை அணுகி, கட்டிடம் கட்டுவதற்கு தேவையான 8 சென்ட் அளவு இடத்தை அரசுக்கு தானமாக வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்று, நிலத்தின் உரிமையாளர். பாபு அவர்களும், ரூபாய் 20 இலட்சம் மதிப்புள்ள, தனக்கு சொந்தமான 8 சென்ட் இடத்தை நெமிலி ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு தானமாக வழங்க முன்வந்தார். இன்று (30-09-2025) பத்திரப்பதிவு அலுவலகத்தில், தனக்கு சொந்தமான 8 சென்ட் இடத்தை, நெமிலி ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு தானமாக வழங்கி பதிவு செய்தார்.
இந்நிலையில், ரூபாய் 20 இலட்சம் மதிப்புள்ள இடத்தை, நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட தானமாக வழங்கிய நிலத்தின் உரிமையாளர், பாபு அவர்களை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் நேரில் அழைத்து பட்டு வேட்டி அணிவித்து, பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வின் போது, பாபு அவர்களின் மகன் நரேஷ் குமார், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு, நெமிலி பேரூர் கழக செயலாளர். ஜனார்த்தனன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்

கருத்துகள்
கருத்துரையிடுக